மேற்கு வங்கத்தின் சோனார்பூரில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட வர்களை நேற்று சந்திக்கச் சென்ற திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி மீது கற்கள், முட்டைகள் வீசப்பட்டன. இவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அவர் ஹெல்மெட் அணிந்து கொண்டார். படம்: பிடிஐ
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் சென்ற திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி தாக்கப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை சந்திப்பதற்காக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி நேற்று சோனார்பூர் பகுதிக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் மீது கற்களும் முட்டைகளும் வீசப்பட்டன. இந்த தாக்குதலுக்கு மத்தியில், ஹெல்மெட் அணிந்திருந்த அபிஷேக் பானர்ஜியை பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தின்போது, பாஜக தொண்டர்கள் அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக ‘சோர் சோர்' (திருடன் திருடன்) என முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அவரைச் சூழ்ந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.
தாக்குதல் குறித்து அபிஷேக் பானர்ஜி கூறும்போது, “இந்தசம்பவம் அனைத்தும் பாஜகவால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. அவர்களின் ஜனநாயகத்துக்கு இதுவே உதாரணம். இவர்கள் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. போலீஸாரை எங்கும் காண முடியவில்லை. எனது பயணம் குறித்து அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தரப்பட்டுள்ளது என்றாலும் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
போலீஸாரும் பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை நான் இங்கிருந்து நகர மாட்டேன். அவர்கள் வீட்டை உடைக்க முயல்கிறார்கள், என்னைக் கொல்ல விரும்புகிறார்கள்” என்றார். அபிஷேக் பானர்ஜியின் இந்தப் பயணத்தில் உள்ளூர் மக்களும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.