

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.கே.சிவகுமார், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து புதிய அரசு அமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கினார். அருகில் முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள். படம்: பிடிஐ
பெங்களூரு: பெங்களூருவில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவராக டி.கே.சிவகுமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து புதிய அரசு அமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கினார்.
முதல்வராக அவர் ஜூன் 3-ம் தேதி பதவியேற்கிறார். இதில் காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்திஉள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையாவை பதவி விலகுமாறு காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தியது. இதனால் கடந்த 28-ம் தேதி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், சித்தராமையா, டி.கே.சிவகுமார், பரமேஷ்வர், பிரியங்க் கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்றனர்.
முன்மொழிந்த சித்தராமையா: சுமார் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவை குழுவின் தலைவராக டி.கே.சிவகுமாரை சித்தராமையா முன்மொழிந்தார். இதை மூத்த தலைவர் பரமேஷ்வர் வழிமொழிந்தார். இதை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவராக டி.கே.சிவகுமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சித்தராமையா, பரமேஷ்வர், முனியப்பா, பிரியங்க் கார்கே உள்ளிட்ட அனைவரும் டி.கே.சிவகுமாரை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிடப் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, டி.கே.சிவகுமார் ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது கே.சி.வேணுகோபால் கூறியதாவது: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவராக டி.கே.சிவகுமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் மிக இலகுவாக நடைபெறுவதற்கு காரணமாக இருந்த சித்தராமையாஉள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
கர்நாடகாவின் புதிய முதல்வராக டி.கே.சிவகுமார், ஜூன் 3-ம் தேதி மாலை பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கார்கே, ராகுல் பங்கேற்பு: பதவியேற்பு நிகழ்வில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. டி.கே.சிவகுமார் ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர் என்பதால், பதவியேற்பதற்கான தேதி மற்றும் நேரத்தை அவரது ஆஸ்தான ஜோதிடர்கள்தான் குறித்துக் கொடுத்துள்ளனர். அதேநேரம், விழா எளிமையாக நடைபெறுவதால், மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான பேருந்துகள் மூலம் காங்கிரஸார் பெங்களூரு வருவதை தவிர்க்க வேண்டும் என கட்சியின் செயல்தலைவர் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், சித்தராமையா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற டி.கே.சிவகுமார், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கினார். அமைச்சர் பதவிக்கு கடும் போட்டி டி.கே.சிவகுமார் தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு காங்கிரஸ் மூத்த எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சித்தராமையாவின் அமைச்சரவையில் 3 ஆண்டுகள் இடம்பெற்றவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கக்கூடாது எனவும், புதியவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் டி.கே.சிவகுமாரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சாதிவாரியாக பதவி வழங்குமாறு ஓபிசி,சிறுபான்மையின, பட்டியலின அமைப்புகளின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவி பெறுவதற்காக பிரியங்க் கார்கே, பரமேஷ்வர், ஜார்ஜ், முனியப்பா, பொன்னண்ணா, ரிஸ்வான், ஜமீர் அஹமது, ஹாரீஷ் உட்பட 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் மூத்த எம்எல்ஏக்கள் மேலிடத் தலைவர்கள் மூலம் காய்களை நகர்த்தி வருகின்றனர்.