துஷான்பே: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தீவிரவாதத்தை ஒழிப்பதில் இரட்டை நிலைப்பாடு கூடாது என தெரிவித்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) தலைவர்கள் குழுக் கூட்டம் தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் தஜிகிஸ்தான் சென்றார். 2-வது நாளாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் பங்கேற்றிருந்த அக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: வளர்ச்சிக்கான மிகக் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாக தீவிரவாதம் விளங்குகிறது. அது உயிர்களுக்கு மட்டுமல்ல, முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கும் தீங்கு விளைவிக்கிறது.
தீவிரவாதம் சமூகங்களைத் தீவிரமயப்படுத்துவதோடு, நமது இளைஞர்களுக்கு வாய்ப்புகளை மறுக்கிறது. ஆகவே, தீவிரவாதத்துக்கு எந்த நியாயமும் இருக்க முடியாது.
அதை ஒழிப்பதில் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது. தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து ஆதரவளிப்பவர்களுக்கும், அவர்களுக்குப் புகலிடம் வழங்குபவர்களுக்கும் இடமளிக்கக்கூடாது. தீவிரவாதத்தின் ஒட்டுமொத்த சூழலமைப்பும் வலுவாகவும் கூட்டாகவும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, “தீவிரவாத செயலுக்கு நிதியளித்தல், ஆள்சேர்ப்பு, தீவிரமயப்படுத்துதல் மற்றும் புகலிடம் அளிப்பதை நாம் தகர்க்க வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.