

கார்த்திகாவை கைது செய்து, காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார்.
தாராபுரம்/சென்னை: முதல்வரின் பிரச்சாரப் பயணத்தின்போது தாராபுரத்தில் நடைபெற்ற சாலை மறியல், காவல் நிலைய முற்றுகை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா உட்பட 8 பேரைத் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது, கடந்த 4-ம் தேதி முதல்வர் விஜய் 2-ம் கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, முதல்வர் செல்லும் வழியில் வைக்கப்பட்டிருந்த நாதகவின் பிளக்ஸ் பேனர்களை போலீஸார் அகற்றியதைக் கண்டித்து, நாதக வேட்பாளரும், மாநில மகளிர் அணி செயலாளருமான கார்த்திகா மற்றும் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், தாராபுரம் காவல்நிலையத்தையும் முற்றுகையிட்டனர்.
இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில், கார்த்திகா, அவரது கணவர் முருக குமாரவேல் உள்ளிட்ட 11 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், கோவையில் தனது இல்லத்தில் இருந்த கார்த்திகா, அவரது கணவர் முருக குமாரவேல் ஆகியோரை நேற்று போலீஸார் கைது செய்தனர். மேலும், நிர்வாகிகள் தென்காசியை சேர்ந்த இசை மதிவாணன், சஞ்சய் காந்தி, மூலனூர் கந்தசாமி, ஷேக்பரீத், சூர்யா, கோகுல் உள்ளிட்ட 8 பேர் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
கோவையில் கைதான கார்த்திகாவை தாராபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக போலீஸார் அழைத்து சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் கார்த்திகா கூறுகையில், “வீட்டில் இரவு உடையுடன் தூங்கிக் கொண்டிருந்த என்னையும், எனது கணவரையும் அதிகாலை 5 மணிக்கு போலீஸார் கைது செய்துள்ளனர். எதற்கு கைது செய்திருக்கிறார்கள் என்ற தகவலை கூட தெரிவிக்கவில்லை” என்றார்.
தலைவர்கள் கண்டனம்
நாம் தமிழர் கட்சியினர் கைதுக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: இடைத்தேர்தலில் அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டதற்காக நாதக நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது தவெக அரசின் குறுகிய மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. போதை மருந்து கடத்தல் வழக்கில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவத்தை திசைதிருப்பும் நோக்கில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருக்கும் சூழலில், பொய் வழக்கு புனைந்து நாதக நிர்வாகிகளைக் கைது செய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியலை வெளிப்படுத்துகிறது. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு நீங்கள் பயந்து நடுங்கிய காலத்தில், அவர்களை எதிர்த்து நின்று அரசியல் செய்து சண்டையிட்டவர்கள் நாங்கள். இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை.
பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் உதயநிதி, திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, எஸ்டிபிஐ மாநில பொறுப்புத் தலைவர் உமர் பாரூக் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.