புதுடெல்லி: தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும், ஏற்கெனவே பயன்பாட்டில் இல்லாத மகதாயி நீர் தகராறு தீர்ப்பாயத்திடம் வழக்கை ஒப்படைக்கக் கூடாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
தென்பெண்ணையாற்றின் குறுக்கே யர்கோல் என்ற பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட நடவடிக்கை எடுத்து வந்தது. அதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இரு மாநிலங்களுக்கிடையே சமரச பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசை அறிவுறுத்தியது. ஆனால் அந்த சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனையடுத்து, தமிழகம் மற்றும் கர்நாடகா இடையேயான தென்பெண்ணையாறு நீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தனித் தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தென்பெண்ணையாறு நீர் பிரச்சினை யைத் தீர்க்கப் புதிய தீர்ப்பாயம் அமைப்பதற்குப் பதிலாக, ஏற்கெனவே பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் மகதாயி நீர் தகராறு தீர்ப்பாயத்திடம் வழக்கை ஒப்படைக்கக்கோரி மத்திய அரசு புதிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகள் பதிலளிக்க கடந்த மாதம் உத்தரவிட்டது.
தனித் தீர்ப்பாயம் வேண்டும்: அதன்படி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தென்பெண்ணையாறு நீர் பங்கீடு விவகாரத்தை மகதாயி தீர்ப்பாயத்திற்கு மாற்றக் கூடாது. தனித் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். நிரந்தரமான தனித் தீர்ப்பாயம் அமைப்பது மட்டுமே சரியான தீர்வாக அமையும், ஏற்கெனவே உள்ள தீர்ப்பாயத்தைப் பயன்படுத்தும் போது அதன் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தில் பல்வேறு சட்ட சிக்கல்கள் ஏற்படும்.
குறிப்பாக, மகதாயி தீர்ப்பாயத்தில் இருக்கும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற நீதித்துறை அதிகாரிகள் ஆவார்கள். எனவே, பதவியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில், இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளை உறுப்பினர்களாக நியமித்து புதிதாக தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். அல்லது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை தலைவராகக் கொண்டு, இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளை உறுப்பினர்களாக கொண்டு 2 மாதத்துக்குள் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். இவ்வாறு தமிழக அரசு பிரமாண பத்திரத்தில் வலியுறுத்தி உள்ளது.