பாஜக எம்எல்ஏ கலிதா மாஜி.
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் குஸ்காரா நகரசபை பகுதியைச் சேர்ந்தவர் கலிதா மாஜி. இவர் இங்குள்ள வீடுகளில் துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது, சமையல் செய்வது போன்ற வீட்டு வேலையை செய்து வந்தார். இதன்மூலம் அவருக்கு மாதம் ரூ.2,500 மட்டுமே கிடைத்து வந்தது. சுமார் 4 வீடுகளில் இந்த வேலையை கலிதா மாஜி செய்து வந்தார்.
இந்நிலையில் அவர் பாஜகவில் கடந்த 2018-ல் இணைந்தார். 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர், அவுஸ்கிராம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் அந்தத் தேர்தலில் திரிணமூல் வேட்பாளர் அபேதானந்தா தாண்டரிடம் 11,815 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தபோதும் அவருக்கு வெற்றி கிட்டவில்லை.
இந்நிலையில் இந்தத் தேர்தலில் அவருக்கு மீண்டும் அதே அவுஸ்கிராம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. கடந்த தேர்தல் தோல்வியால் அவர் மனம் துவளாமல் களத்தில் இறங்கினார். தொகுதி முழுவதும் சூறாவளியாக சுழன்று பிரச்சாரம் செய்தார் கலிதா மாஜி. தேர்தலின் முடிவில் கலிதா மாஜி 1,07,692 வாக்குகள் பெற்று மகத்தான வெற்றியைக் கொண்டு வந்துள்ளார். இதன்மூலம் ஏழ்மை நிலையில் உள்ளவரையும், எம்எல்ஏவாக உயர்த்தி சமூக நீதியை பாஜக மேலிடம் நிலைநாட்டியுள்ளது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வீட்டு வேலை செய்துகொண்டிருந்த பெண்ணை, கட்சியில் இணைத்து எம்எல்ஏவாக்கியுள்ள பாஜக தலைவர்களுக்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கலிதா தொடர்பான செய்தி, புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.