இந்தியா

தவெக ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் அழைத்திருக்க வேண்டும்: எம்.ஏ.பேபி

சிபிஎம், சிபிஐ, விசிக விரைவில் முடிவு எனப் பேட்டி

மோகன் கணபதி

புதுடெல்லி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள கட்சியே (தவெக) ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்றும் இவ்விஷயத்தில் தங்கள் கட்சியின் முடிவு இன்னும் சில மணி நேரங்களில் உறுதிப்படுத்தப்படும் என்றும் சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக தேர்தல் முடிவுகள் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலத்தை வழங்கவில்லை. அதேநேரத்தில், விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிட சில இடங்கள் மட்டுமே அக்கட்சிக்கு குறைவாக உள்ளது. மரபுப்படி பார்த்தால், தனிப்பெரும் கட்சியாகத் திகழும் அக்கட்சியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும். சட்டமன்றத்தில், தனது பெரும்பான்மையை நிரூபிக்க அக்கட்சிக்கு கால அவகாசம் அளித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக ஆளுநர் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்பது வியப்பையும் கவலையையும் அளிக்கிறது.

இத்தகைய ஒரு சூழலில், ஜனநாயக நடைமுறையில் எவ்வித சிக்கலும் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு நாங்கள் (சிபிஎம்) எங்களின் நட்புக் கட்சிகளான சிபிஐ மற்றும் விசிக ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுத்துள்ளோம். தமிழகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் தேக்க நிலையை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கிலும், தமிழக மக்கள் வழங்கி இருக்கும் ஒட்டுமொத்த தீர்ப்பை மதித்துப் போற்றும் நோக்கிலும் சில மணி நேரங்களில் நாங்கள் எங்கள் முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளோம்.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள கட்சியே ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து மூன்று கட்சிகளும் தற்போது கலந்தாலோசித்து வருகின்றன. இன்னும் சில மணி நேரங்களுக்கும் நாங்கள் எங்கள் முடிவை அறிவிப்போம்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT