

புதுடெல்லி: திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியுள்ள நிலையில், இக்கட்டான நேரங்களில் ஒருவரை ஒருவர் கைவிடுபவர்கள் நாங்கள் அல்ல என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வந்த காங்கிரஸ் கட்சி, சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திடீரென திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு தவெக உடன் கூட்டணி அமைத்தது. மேலும், அடுத்து வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தவெக உடனான கூட்டணி தொடரும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
ஆட்சி அமைக்க போதிய ஆதரவு இல்லாத நிலையில், தவெக தலைவர் விஜய் விடுத்த கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் இந்த முடிவை எடுத்தது. எனினும், காங்கிரஸ் கட்சியின் இந்த அணிமாற்றம் முதுகில் குத்தும் செயல் என்று திமுக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைப்பாடு கடும் கண்டனத்துக்குரியது. காங்கிரஸ் கட்சி தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
ஒரு மாநிலங்களவை இடத்தையும் 28 சட்டமன்றத் தொகுதிகளையும் நமது தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெற்றது. கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றியைப் பணயம் வைத்து மாற்று அணிக்கு மூன்று நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சி மாறியது. கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே கூட்டணிக்கு எதிரான கருத்தை அக்கட்சியினர் சொன்னதை காங்கிரஸ் கட்சி தடுக்கவும் இல்லை; கண்டிக்கவும் இல்லை.
புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இடம்பெற்றது. திமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்ட கொடுமையும் நடந்தது. அதைவிடக் கொடுமை என்ன என்றால், அப்படி போட்டியிட்ட வேட்பாளர்கள், அதன் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற காட்சியும் நடந்தது. அதாவது, தேர்தலுக்குப் பிறகு அல்ல, தேர்தல் நடக்கும்போதே உண்மையாக நடந்து கொள்ளாத கட்சிதான் காங்கிரஸ் கட்சி!
அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, பெருந்தன்மையோடும் பொறுப்போடும் நடந்துகொண்ட நம் கட்சித் தலைவருக்கு நேரில் வந்து வெற்றி பெற்றதற்காக ஒரு நன்றி கூட தெரிவிக்காது, முதுகில் குத்தி, மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.
பாஜக பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் நமக்குச் செய்துள்ளது. தோழமை சக்தியின் காலை வாரி, நட்பு சக்திகளுக்குத் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியின் திடீர் மாற்றத்தைக் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த மு.க.ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்று கொல்கத்தாவுக்குச் சென்ற அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜியை சந்தித்து தனது ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
இன்று அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இக்கட்டான நேரங்களில் ஒருவரை ஒருவர் கைவிடுபவர்கள் நாங்கள் அல்ல” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தோல்வி அடைந்த நிலையில், அக்கட்சியுடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்துக்கொண்டதையே அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.