ராகுல் காந்தி | கோப்புப் படம்
புதுடெல்லி: “மக்கள் சொல்லும் பிரச்சினைகளை கேட்கும், பதிலளிக்கும், வாக்குறுதியை நிறைவேற்றும் பொறுப்பான ஆட்சியை கேரளா விரும்புகிறது என்பதையே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதுவரையிலான முடிவுகளின்படி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி முதலிடத்தில் உள்ளது. ஆளும் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி இரண்டாம் இடத்திலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாம் இடத்திலும் உள்ளன.
தேர்தல் முடிவுகளை அடுத்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘‘உள்ளாட்சித் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி மீது நம்பிக்கை வைத்த கேரள மக்களுக்கு ஒரு சல்யூட். இது ஒரு தீர்க்கமான மற்றும் உற்சாகம் அளிக்கும் மக்கள் ஆணை.
ஐக்கிய ஜனநாயக முன்னணி மீதான நம்பிக்கை அதிகரித்து வருவதற்கான தெளிவான அறிகுறியாக இந்த முடிவுகள் உள்ளன. மேலும், வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நமது மாபெரும் வெ்றறிக்கு இது வழிவகுக்கும். மக்களின் பிரச்சினைகளை கேட்கும், பதில் அளிக்கும், வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பான ஆட்சியை கேரளா விரும்புகிறது என்பதே இந்த தேர்தலின் செய்தி.
கேரளாவின் சாமானிய மக்களுடன் நிற்பது, அவர்களின் அன்றாட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, வெளிப்படையான மற்றும் மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை உறுதி செய்வது என்பதில் எங்கள் கவனம் அசைக்க முடியாததாக இருக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துகள். இந்த வெற்றியை சாத்தியமாக்க அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்’’ என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘‘உள்ளாட்சித் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு வழங்கப்பட்ட தீர்க்கமான தீர்ப்புக்காக இந்திய தேசிய காங்கிரஸ், கேரள மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
அடுத்த சில மாதங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தல்களிலும் எங்கள் கூட்டணி இதேபோன்ற மக்கள் தீர்ப்பைப் பெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த நம்பிக்கையுடன் காங்கிரஸ் கட்சி பொறுப்புடனும் ஒரே நோக்கத்துடனும் பிரச்சாரத்தில் ஈடுபடும்’’ என தெரிவித்துள்ளார்.