புதுடெல்லி: நமது நாட்டின் கல்வி முறையை அடியோடு மாற்றி அமைக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
நீட் தேர்வு முறைக்கு எதிராக உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நேற்று முன்தினம் மாணவர்கள் பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராகுல் காந்தி கூறியதாவது: கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ரியா குமாரி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தை ராஜேஷ் குமாரைச் சந்தித்து நான் ஆறுதல் தெரிவித்தேன்.
மகள் ரியாவை இழந்து விட்டதால் ராஜேஷ்குமார் மிகவும் உடைந்து போயிருந்தார். அதைக் கண்ட அனைவரின் கண்களிலும் கண்ணீர் பெருகியது. இது ஒரு குடும்பத்தின் துயரம் மட்டுமல்ல. வினாத்தாள் கசிவு விவகாரம் இதுபோன்ற பல குடும்பங்களிடம் இருந்து அவர்களின் குழந்தைகளைப் பறித்துவிட்டது. தொடர்ச்சியாகத் தேர்வு வினாத்தாள்கள் கசிவது பல குடும்பங்களுக்கு ஈடு செய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு வினாத்தாள் கசிவு என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட பிரச்சினையாக மாறிவிட்டது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்து தேவை. கடந்த பத்தாண்டுகளில் வினாத்தாள் கசிவுகளால் சுமார் 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பயிற்சி மையங்கள், தேர்வு மையங்கள் முதல் வினாத்தாள் தயாரிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், போக்குவரத்து மற்றும் விநியோகஸ்தர்கள், தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ), கல்வி அமைச்சகம் வரை ஒட்டுமொத்த கல்விச் சூழல் அமைப்பும் இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ளது.
இந்த ஊழல் நிறைந்த அமைப்பால் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே, கல்வி, தேர்வு முறை அமைப்பை அடியோடு மாற்றி அமைக்க வேண்டும. குழந்தைகள் மன அழுத்தத்துக்குப் பதிலாகப் பாதுகாப்பை உணரும் வகையிலும், பெற்றோர்கள் கண்ணீருக்குப் பதிலாகத் தங்கள் தியாகங்களுக்கான பலனை அடையும் வகையிலும் ஒரு சூழலை நாம் உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.