புதுடெல்லி: கருங்கடல் பகுதியில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகளை மீட்க இந்திய அதிகாரிகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் கருங்கடலில் உள்ள உக்ரைன் துறைமுகத்தில் இருந்து சமீபத்தில் புறப்பட்ட ஒரு சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.
அதேபோல் கருங்கடல் பகுதியில் ரஷ்ய எல்லைக்குட்பட்ட கடலில் பயணித்த கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு இந்திய மாலுமி உயிரிழந்தார். இந்நிலையில், உக்ரைன் துறைமுகத்தில் நடைபெற்ற தாக்குதல் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டுள்ள எம்.வி. அமீர் 1 கப்பலில் 13 இந்திய மாலுமிகள் உள்பட 15 பேர் சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்தக் கப்பலுக்கு அருகே ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் நேற்று நடத்தப்பட்டன. கப்பல் நிறுத்தப்பட்டுள்ள பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து மத்திய அரசுக்கு இந்திய மாலுமிகள் சங்கம் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மாலுமிகள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “உக்ரைன் துறைமுகத்தில் கப்பலுக்கு மிக அருகில் தொடர்ச்சியாக ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. எந்த நேரத்திலும் கப்பல் நேரடியாகத் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் பணியாளர்கள் உள்ளனர்.
எனவே மத்திய அரசு, கப்பல் உரிமையாளர்கள், கப்பல் பதிவு செய்யப்பட்ட நாட்டின் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் உடனடியாகப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களை மீட்டு விரைவாக நாடு திரும்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். மோதல் நடைபெறும் பகுதிகளில் இந்திய மாலுமிகள் எளிதில் தாக்கப்படக்கூடிய இலக்குகளாக விடப்படக்கூடாது. இதில் உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
இதனிடையே உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது: இந்திய மாலுமிகள் உள்ள எம்.வி. அமீர்-1 கப்பல் தொடர்பான விவகாரம் எங்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் உள்ள மாலுமிகளை மீட்பதற்காக நாங்கள் அதிக முன்னுரிமை அளித்து வருகிறோம்.
கப்பலில் உள்ள அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட அனைவருடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு இந்தியத் தூதரகம் தெரிவித்து உள்ளது.