புதுடெல்லி: அரசு விழாக்களில் 'வந்தே மாதரம்' பாடலின் அனைத்துச் சரணங்களையும் பாடுவது பார்வையாளர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் விமர்சித்துள்ளார். இதற்குப் பதிலடியாக, மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது கட்டாயம் என பாஜக காட்டமாகத் தெரிவித்துள்ளது.
புது டெல்லியில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்ட நிகழ்வை நினைவு கூர்ந்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர், அந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் முடிவிலும் 'வந்தே மாதரம்' பாடல் முழுமையாக இசைக்கப்பட்டதாகக் கூறினார்.
அதாவது, பார்வையாளர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்குப் பெரிதும் பரிச்சயமில்லாத, நீண்ட நேரம் ஒலிக்கும் ஒரு பாடலுக்காக இரண்டு முறை எழுந்து நிற்பது சிரமமாகவே அமைந்தது என்று அவர் கூறினார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “'வந்தே மாதரம்' நமது தேசியப் பாடல், அதற்கு அனைவரும் மதிப்பளிக்கிறோம். ஆனால், ஒவ்வொரு நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் முடிவிலும் அதன் ஐந்து சரணங்களையும் முழுமையாக பாட வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்துவது தேவையற்ற ஒரு திணிப்பு.
இந்த விவகாரத்தில் பாடலைப் பாடுவது ஒரு விருப்பத் தேர்வு (optional) என்ற நிலைப்பாட்டை கேரள முதல்வர் எடுத்துள்ளார். அதன் அடிப்படையில், பாடலை முழுமையாகப் பாடுவதைத் தவிர்க்கும் உரிமையை கேரளா பயன்படுத்த முடிவெடுத்துள்ளது” என்று அவர் கூறினார்.
இதற்கு எதிர்வினையாற்றியுள்ள பாஜகவின் ஐடி பிரிவுத் தலைவரான அமித் மால்வியா, “அரசு நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலை முழுமையாகப் பாடுவது விருப்பத்திற்குரியது அல்ல. இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி கட்டாயமானது. மாநில அரசுகள் இதில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.
'வந்தே மாதரம்' என்பது ஒரு அரசியல் கட்சி சார்ந்த முழக்கம் அல்ல; அது இந்தியாவின் தேசியப் பாடல்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.