

சென்னை: இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.
தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப் படத்தின் மூலமாக திரைத் துறையில் கால் பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்து வரும் இசைஞானி இளையராஜா தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்.
உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!” என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: “இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!. கருணாநிதி மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்த நாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர்.
‘இசைஞானி’ என்று கருணாநிதி பட்டம் சூட்டினார். அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும். ராஜா என்றும் ராஜாதான்!” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: "எங்களின் இசை மருத்துவரும், உலகின் தலை சிறந்த இசையமைப்பாளருமான இசைஞானி இளையராஜா 84ம் பிறந்த நாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இசைஞானியின் தனிச் சிறப்பு என்னவென்றால், தாய், தந்தை, குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரையும் விட, இசையாய் மிக அதிக நேரம் ஒவ்வொருவருடனும் இணைந்திருப்பது தான். இளைய ராஜா படைப்புகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மன சஞ்சலங்கள், மன அழுத்தங்கள் உள்ளிட்ட அனைத்து சிக்கல்களுக்கும் இலவச மருத்துவமாக அமைவது அவரது இசை தான்.
இசைஞானியின் இசைத் தொண்டு காலங்களைக் கடந்து தொடர வேண்டும். இசைஞானி நூற்றாண்டுகளைக் கடந்து வாழ்ந்து இசையால் இனிவரும் தலைமுறைகளையும் மகிழ்விக்க வேண்டும்” என்று அன்புமணி கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: "இசை உலகின் ஈடு இணையற்ற மா மேதையாகவும், கோடிக் கணக்கான மக்களின் மனங்களை தன் உணர்வுப்பூர்வமான இசையால் ஆட்கொண்டிருப்பவருமான இசைஞானி இளையராஜாவின் பிறந்த தினம் இன்று.
கிராமிய இசையில் தொடங்கி மேற்கத்திய இசை வரை தன்னுடைய தனித்திறமையால் கோலோச்சி, காலம் கடந்தும் நிற்கும் காவியங்களைப் படைத்துக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா, நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது இசையால் மக்களை மகிழ்விக்க வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.