புதுடெல்லி: அமித் ஷாவின் பெயரைக் கேட்டாலே தீவிரவாதிகள் அஞ்சி நடுங்குவார்கள் என்று மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்துக்கு காலையில் வருகிறார். இரவில்தான் அவர் வீடு திரும்புகிறார். மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பெயரைக் கேட்டாலே தீவிரவாதிகள் அஞ்சி நடுங்குவார்கள். அவையில் விவாதம் நடத்தப்பட்டு அமைச்சர் அமித் ஷா பதில் அளித்தால் உங்களால் அவரை எதிர்கொள்ள முடியாது.
குறிப்பிட்ட ஓர் அமைச்சர் அவைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளால் உத்தரவிட முடியாது. ஓர் அமைச்சர் அவையில் விளக்கம் அளிப்பது குறித்து சபாநாயகர் மற்றும் மத்திய அரசால் மட்டுமே முடிவு எடுக்க முடியும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.