தெலங்கானா முதல்வர் ரேவந்த்
ஹைதராபாத்: வரும் டிசம்பருக்குள் ஹைதராபாத்தில் டீசல் பேருந்துகள் இருக்காது என தெலங்கானா முதல்வர் ரேவந்த் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, பெண் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: கல்லூரி மாணவர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தோம். அது இந்த நிதியாண்டில் சாத்தியம் இல்லை. ஆனால், இத்திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
ஹைதராபாத் நகரை மாசற்ற நகரமாக மாற்ற, இங்கு ஓடும் 2,800 டீசல் பேருந்துகளுக்கு பதிலாக மின்சார ஏ.சி பேருந்துகள் மாற்றப்பட்டு வருகின்றன. இந்தாண்டு டிசம்பர் 9-ம் தேதிக்குள், ஹைதராபாத்தில் டீசல் பேருந்துகள் இருக்காது.
2 லட்சம் டீசல் ஆட்டோக்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும். மின்சார வாகனங்களுக்கு தெலங்கானா அரசு வரி விதிப்பதில்லை. ஹைதரபாத்தில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குக்கு தடை விதிப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.
நகரத்துக்குள் இயங்கும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் வெளியிடங்களுக்கு மாற்றப்படும். மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் மழைக் காலங்களில் வெள்ளம், போக்குவரத்து நெரிசல், மாசு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் உள்ளன.
ஆனால், அது போன்ற பிரச்சினைகள் ஹைதராபாத்தில் இல்லை. டோக்கியோ மற்றும் சிங்கப்பூர் போல் மாசற்ற நகரமாக ஹைதராபாத்தை மாற்ற காங்கிரஸ் அரசு விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.