வனஜா
திருவனந்தபுரம்: கேரளாவின் திருச்சூர் மாவட்டம் மேற்கு கோரட்டி கிராமத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப்பள்ளியில் கடந்த 26 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் வனஜா. இம்மாத இறுதியில் அவர் ஓய்வு பெற உள்ளார்.
அந்தப் பள்ளியின் மைதானம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதனால் தனது ஓய்வு நாள் பரிசாக மைதானத்தை புதிதாக கட்டிக் கொடுக்க வனஜா முடிவு செய்தார்.
இதற்காக தனது சேமிப்பு தொகையில் இருந்து ரூ.5 லட்சத்தை அவர் தானமாக வழங்கினார். முன்னாள் மாணவர் ஒருவர் குறைந்த செலவில் மைதானத்தை சீரமைத்துக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆசிரியை வனஜா கூறும்போது, “இந்த தொடக்கப் பள்ளிதான் எனது உலகம். விரைவில் ஓய்வு பெறப் போகிறேன். எனது நினைவாக மாணவ, மாணவியருக்கும், பள்ளிக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன். இதற்கு எனது குடும்பமும் முழு ஆதரவு அளித்தது” என்றார்.