மகாராஷ்டிர போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக்
புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி தெரிந்திருக்கிறதா என்பதை அறிய மே.1 முதல் ஆக.15 வரை சிறப்பு சரி பார்ப்புப் பணி நடைபெற உள்ளது.
இது குறித்து மகாராஷ்டிர போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்தச் சோதனையின் போது ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி தெரியவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் ரத்து ஆகாது. ஆனால், மராத்தி மொழி கற்க கால அவகாசம் அளிக்கப்படும். ஏற்கெனவே உள்ள சட்ட விதிகளின்படி மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி தெரிந்திருக்கிறதா என்பதை அறியும் பணி மாநிலம் முழுவதும் உள்ள 59 மண்டலப் போக்குவரத்து அலுவலகப் பகுதிகளில் நடைபெறுகிறது. சமீபத்தில் மும்பை மீரா பாந்தர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், 3,443 ஆட்டோ ஓட்டுநர்களில் 565 பேருக்கு மராத்தி மொழி பேச தெரியவில்லை என்ற விவரம் தெரிந்தது.
சிவசேனாவைச் சேர்ந்த அமைச்சர் பிரதாப் சர்நாயக், சில நாட்களுக்கு முன்னர் கூறும்போது, "மகாராஷ்டிராவில் யாராவது தொழில் செய்ய விரும்பினால், அவர்களுக்கு மராத்தி மொழி தெரிந்திருப்பது கட்டாயம். இதற்கு ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர் சங்கப் பிரதிநிதிகள் ஆதரவு அளித்துள்ளனர்" எனக் கூறியிருந்தார்.
மராத்தி மொழி கற்க விரும்பும் ஓட்டுநர்களுக்கு மண்டலப் போக்குவரத்து அலுவலகங்களிலேயே ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மேலும் கொங்கன் மராத்தி சாகித்ய பரிஷத், மும்பை மராத்தி சாகித்ய சங்கம் ஆகியவை இதற்கான பயிற்சிகளை வழங்க உள்ளன. மராத்தி மொழிப் பயிற்சியை முடிக்கும் ஓட்டுநர்களுக்கு மாநில அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க தேவைப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர அரசியலில் மராத்தி மொழி மற்றும் மண்ணின் மைந்தருக்கு வேலை போன்ற முழக்கங்கள் முன்னாள் முதல்வரும் சிவசேனா நிறுவனருமான பால் தாக்கரே முதன் முதலில் தொடங்கி வைத்திருந்தார். இந்த முறை அதை அரசு சார்பில் ஷிண்டே பிரிவின் சிவசேனா கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.