ஜெய்சால்மர்: “வரும் 2029-ம் ஆண்டுக்குள் ரூ.3 லட்சம் கோடி மதிப்பில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என, ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவப் படைகளின் நவீனமயமாக்கல் தொடர்பாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்புத் துறை ஆலோசனைக் குழுக் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: தற்போதைய மற்றும் எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ராணுவத்தை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
2026-27 நிதியாண்டுக்கான பாதுகாப்புத் துறை பட்ஜெட் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.7.85 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வரும் 2029-ம் ஆண்டுக்குள் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதுடன், ரூ.50,000 கோடி மதிப்பிலான தளவாடங்களை ஏற்றுமதி செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நவீன போர் முறைகளில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. மேம்பட்ட ஆயுதங்கள், ஏவுகணைகள் மற்றும் ராணுவத் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.
இந்திய ராணுவத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அசானி (Asani), பைரவ் (Bhairav), சக்திபன் (Shaktiban) உள்ளிட்ட படைப்பிரிவுகள், தற்போதைய ராணுவ நடவடிக்கைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.