பெங்களூரு: இலங்கை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் துறை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்திருந்தார். அவரை தாய்மொழி கூட்டமைப்பு மற்றும் திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் எஸ்.டி.குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்பினர் சந்தித்து பேசினர்.
அப்போது எஸ்.டி.குமார் கூறுகையில், “கடந்த ஜூலை 5-ம் தேதி பெங்களூருவில் ஏழாவது திருக்குறள் மாநாட்டை நடத்தினோம். அதில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். எட்டாவது உலக திருக்குறள் மாநாட்டை இலங்கை அரசு சார்பில் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடத்த வேண்டும். அதற்கு கர்நாடக தமிழ் அமைப்பினர் உறுதுணையாக இருப்பார்கள்” என்றார்.
இதற்கு இலங்கை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பதிலளிக்கையில், “உங்களின் கோரிக்கை குறித்து எங்களது நாட்டு அரசுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். எட்டாவது உலக திருக்குறள் மாநாட்டை இலங்கையில் நடத்துவது குறித்து நல்ல முடிவை எதிர்பார்க்கலாம்” என உறுதி அளித்தார்.