ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர சோழன்
பெங்களூரு: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரின் செயலாளராக மதுரையை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர சோழன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் நேற்று முன்தினம் பதவியேற்றார். அவர் முதல்வரானதும் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி முதல்வரின் நிதி ஆலோசகரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எல்.கே.அத்தீக் நியமனம் செய்யப்பட்டார்.
கர்நாடக துணை முதல்வரின் (டி.கே.சிவகுமார்) செயலாளராக இருந்த ராஜேந்திர சோழன் ஐஏஎஸ், முதல்வரின் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் அழகப்பம்பட்டியை சேர்ந்த இவர் கடந்த 2008ம் ஆண்டில் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இந்திய அளவில் 31-வது இடம் பிடித்த இவர், கர்நாடகாவில் பணிக்கு சேர்ந்தார்.
பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையின் இயக்குநர், கர்நாடக மின்சார கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநர், கூடுதல் தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். டி.கே.சிவகுமார் துணை முதல்வராக இருந்தபோது அவரது செயலாளராக திறம்பட பணியாற்றினார். இதனால் அவரது நன்மதிப்பை பெற்ற ராஜேந்திர சோழனுக்கு, பெங்களூரு மத்திய மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் பதவியை வழங்கினார்.
இந்நிலையில், டி.கே.சிவகுமார் முதல்வரானதும், தனக்கு விருப்பமான ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர சோழனை தனது செயலாளராக நியமித்தது குறிப்பிடத்தக்கது.