கோப்புப் படம்
புதுடெல்லி: தமிழகம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கிராமப்புற மக்கள், விவசாயிகள் மற்றும் கடின உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் இடையே காரணம் அறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோய் (CKDu) வேகமாக அதிகரித்து வருவது குறித்து நாடாளுமன்றக் குழு எச்சரித்துள்ளது.
இந்நோய் குறித்து விரிவாக ஆராயவும், தீவிரக் கண்காணிப்பு அமைப்பை உருவாக்கவும் மத்திய அரசுக்கு அக்குழு பரிந்துரைத்துள்ளது.
சமாஜ்வாதி கட்சி எம்பி ராம் கோபால் யாதவ் தலைமையிலான சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில்,தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 15 மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிறுநீரக நோய்களுக்குப் பொதுவாக நீரிழிவு (31%) மற்றும் உயர் ரத்த அழுத்தம் (13%) ஆகியவையே முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. ஆனால், இந்நோய் எந்தவொரு முந்தைய உடல்நலப் பாதிப்பும் இல்லாத குறைந்த வருவாய் கொண்ட இளம் விவசாயத் தொழிலாளர்களை (16%) அதிகம் தாக்குகிறது.
அதிக வெப்பம், தொடர் நீர்ச்சத்து குறைபாடு, பூச்சிக்கொல்லி மருந்துகள், சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் கன உலோகங்களின் தாக்கம் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பருவநிலை மாற்றத்திற்கும் இதற்கும் இடையிலான தொடர்பையும் ஆராய வேண்டும் என நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் சில கிராமப்புறப் பகுதிகளில் 18 முதல் 20 சதவீத மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த மாவட்ட அளவிலான கண்காணிப்பு, வேலை செய்யும் இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் மற்றும் அதிக வெப்பத்தில் பணியாற்றுபவர்களுக்கு இடைவேளை அளித்தல் போன்ற நடவடிக்கைகளுடன் கூடிய தேசிய தடுப்பு மற்றும் கண்காணிப்பு வழிகாட்டுதலை உருவாக்க இந்த குழு பரிந்துரைத்துள்ளது.