புதுடெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். அமெரிக்க பிரதிநிதிகளுடன் டெல்லியில் நடத்திய 2 நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் தகவலை அமைச்சர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்ற பின், உலக நாடுகளுக்குப் பரஸ்பர வரிவிதிப்பு முறையை கொண்டு வந்தார். அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா போன்ற நாடுகள் 100 சதவீதத்துக்கும் அதிகமாக வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. இதை ஐரோப்பிய நாடுகளும் பின்பற்றி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைத் தவிர்த்து வளைகுடா நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்கத் தொடங்கின. ரஷ்யாவிடம் இருந்து சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதால்தான், உக்ரைன் போரை தொடர்ந்து நடத்துவதற்கான நிதி ரஷ்யாவுக்கு கிடைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
இதற்கு அபராதமாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனால் இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்ந்தது. இது அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியைக் கடுமையாக பாதித்தது. இதன் காரணமாக இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை தடைபட்டது.
இதையடுத்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைக்கத் தொடங்கியது. அதன்பின் இந்தியா - அமெரிக்கா வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கின. அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து 500 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்யவும், முதலீடு செய்யவும் இந்தியா உறுதியளித்துள்ளது. இதன் காரணமாக, இந்திய ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்ட வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க அமெரிக்கா ஒப்புக் கொண்டது.
பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பின் நேரில் சந்தித்து பேசினர். அப்போது இந்தியா - அமெரிக்கா இடையே மிகச் சிறந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி தூதர் ஜேமிசன் கிரீர் மற்றும் அவரது குழுவினர் டெல்லி வந்துள்ளனர். அவர்களுடன் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான மத்திய அரசு குழுவினர் நேற்றுமுன்தினம் பேச்சுவார்த்தையைத் தொடங்கினர். இருதரப்பு பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்றுடன் முடிந்தது.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் நிலை குறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி தூதர் ஜேமிசன் கிரீர் மற்றும் அவரது குழுவினருடன் விவாதித்தோம். பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை நாங்கள் ஆராய்ந்தோம். இரு நாடுகள் இடையேயான பொருளாதாரக் கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான வழிகளையும் நாங்கள் ஆராய்ந்தோம். அமெரிக்க தூதர் கிரீரின் தலைமைத்துவத்தையும், நமது பேச்சுவார்த்தைகளை ஆக்கப்பூர்வமான மற்றும் தொலைநோக்கு சிந்தனையுடன் முன்னோக்கி கொண்டு செல்வதில் இரு குழுக்களும் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
டெல்லியில் 2 நாட்கள் நடைபெற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் அடுத்தகட்டமாக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் இருதரப்பும் மீண்டும் ஆலோசனை நடத்தும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.