கொல்கத்தா: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நீட் எதிர்ப்பு போராட்டத்தின் போது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வன்முறையைத் தூண்டியதாக அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்கத்தாவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தின் போது இடதுசாரி ஆதரவு போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களைக் பாதுகாப்புப் படையினர் கலைத்தனர்.
போராட்டத்தின் போது வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மாநில அரசு, புதிதாக இயற்றப்பட்டுள்ள 'குண்டர் தடுப்புச் சட்டத்த்தின்' (anti-goonda law) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
பேரணியில் அடையாளம் காணப்பட்ட சுமார் 70 பேர் மாணவர்கள் அல்ல என்றும், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டத்துடன் அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சுவேந்து அதிகாரி சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார். மேலும், அவர்கள் அடுத்த மூன்று தலைமுறைகளும் நினைவில் வைத்திருக்கும் வகையிலான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், கர்கில் வெற்றி தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நந்திகிராமில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சுவேந்து அதிகாரி, “இவர்களுக்கும் இந்தப் போராட்ட இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் மாணவர்கள் அல்ல. அவர்கள் ஜமாத் (இஸ்லாமிய) அடிப்படைவாதிகள். அவர்களுக்கு வெளிநாட்டு சக்திகள் ஆதரவளித்தனவா என்பதை விசாரணை அமைப்புகள் தீர்மானிக்கும்.
பதிவு செய்யப்படாத மதரஸாக்கள் மீதான நடவடிக்கை, OBC சான்றிதழ்கள் தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துதல், கால்நடை இறைச்சிக்கான சட்டங்களைச் செயல்படுத்துதல், ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட மாநில பாஜக அரசின் பல்வேறு முடிவுகள் மீதான அதிருப்தி காரணமாக அவர்கள் இந்த வன்முறையைத் தூண்டியிருக்கலாம்.
போராட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வன்முறைக்கு காரணமாக இருந்தவர்களுக்கும் போராட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
வினாத்தாள் கசிவை கட்டுப்படுத்தும் நோக்கில், திங்களன்று மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ள 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுத்தல்) திருத்த மசோதா', தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டுள்ள உறுதிப்பாட்டையே காட்டுகிறது.” என தெரிவித்தார்.