கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்க இருக்கிறார். இன்று நடைபெற்ற பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான தகுதியை பெற்றது. இதையடுத்து, கட்சியின் சட்டமன்றக் குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது.
இதில், பாஜகவின் மத்திய பார்வையாளராக அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும், மத்திய இணை பார்வையாளராக ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜியும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பாஜக சட்டமன்றக் குழு தலைவராக சுவேந்து அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அமித் ஷா இதனை அறிவித்தார்.
அப்போது பேசிய அமித் ஷா, “மேற்கு வங்க பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக சுவேந்து அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை நான் அறிவிக்கிறேன். மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக அவர் இருப்பார்” என தெரிவித்தார். இதையடுத்து, சுவேந்து அதிகாரிக்கு கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய அமித் ஷா, “இந்த தருணத்தில் வங்க மக்களை கைகூப்பி வணங்கி எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேற்கு வங்கத்தை கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சி செய்த போது மாநிலத்தில் அச்சம் நிறைந்த சூழல் நிலவியது. மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த பிறகு இன்னும் ஆழமான அச்சம் நிறைந்த சூழலாக அது மாறியது.
மேற்கு வங்கத்தில் வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்துவதே ஏறக்குறைய சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்தது. நூற்றுக்கணக்கான வன்முறைச் சம்பவங்களே இதற்குச் சான்றாக உள்ளன.
இத்தகைய சூழலுக்கு மத்தியில், பாஜக மீதும் எங்கள் தலைவர் நரேந்திர மோடி மீதும் நம்பிக்கை வைத்து வங்க மக்கள் அளித்திருக்கும் இந்த மகத்தான வெற்றிக்கு நான் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் நம்பிக்கை சற்றும் சிதைந்துவிடாமல் இருக்கவும், அதில் எவ்வித குறைபாடும் ஏற்படாமல் இருக்கவும் நாங்கள் எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
பொற்கால வங்கம் எனும் இலக்கை நோக்கி முன்னேறிச் செல்வதும், வங்க மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்வதும் அனைத்து பாஜக தொண்டர்களின் பொறுப்பாகும்.
வங்கத்தில் இன்று கிடைத்துள்ள வெற்றி பல கண்ணோட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நூற்றாண்டு கால கருத்தியல் பயணத்துக்குப் பிறகு இன்று கங்கோத்ரி முதல் கங்கா சாகர் வரையிலான பரப்பளவு முழுவதிலும் பாஜக அரசுகள் அமைந்திருப்பது நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.
1950-ம் ஆண்டு முதல் நாம் முன்னெடுத்துச் சென்ற கருத்தியல் பயணத்தில் யாருடைய தலைமையின் கீழ் நாம் பயணித்தோமோ அந்த டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி மண்ணில் அவருடைய சொந்த கட்சியின் அரசே அமையவிருக்கிறது. டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி இன்று எங்கு இருந்தாலும் அவர், பிரதமர் மோடியின் தலைமையை வாழ்த்திக் கொண்டிருப்பார் என நான் நம்புகிறேன்” என தெரிவித்தார்.
மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி நாளை பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார். வங்க கவிஞர் ரபிந்தரநாத் தாகூரின் பிறந்த தினம் நாளை என்பது குறிப்பிடத்தக்கது.