புதுடெல்லி: வெறிநோய் மற்றும் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட ஆபத்தான நாய்களை கருணை கொலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் தெரு நாய்கள் கடித்து சிறுவர்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அன்ஜாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது.
அதில் கூறியிருப்பதாவது: தெரு நாய்கள் தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த உத்தரவுகள் திரும்ப பெறப்பட மாட்டாது. விலங்குகள் நல வாரிய விதிகளை மாநில அரசுகள் முறையாக அமல்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் விலங்குகள் கருத்தடை மையத்தை அமைக்க வேண்டும்.
தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பகுதியில் விலங்குகள் கருத்தடை மையங்களை அதிகரிக்க வேண்டும். அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் போதுமான அளவு ரேபிஸ் தடுப்பூசிகளை வைத்திருக்க வேண்டும். நாய்க் கடி, அதற்கான முதலுதவி சிகிச்சை குறித்து பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விளையாட்டு அரங்குகள், மருத்துவமனைகளில் தெரு நாய்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும். இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். வெறிநோய் மற்றும் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட ஆபத்தான நாய்களை கருணை கொலை செய்யலாம். உச்ச நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தும் அரசு ஊழியர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.