புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு, ‘டோட்டலைசர்’ கருவிகளை பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குப்பதிவின்போது குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்தன என்பதை அறிந்து கொள்வதால், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் மற்றும் வாக்காளர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாவதைத் தடுக்க வேண்டும். அதற்காக 14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒன்றாக இணைத்து, மொத்தமாக வாக்குகளை எண்ணும் ‘டோட்டலைசர்’ கருவிகளை அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கோரி யோகேஷ் குப்தா என்பவர் சார்பில், வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாய் மற்றும் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் ஆகியோர் வாதிடும்போது, “வாக்காளர்களின் தனி உரிமையைப் பாதுகாக்கவும், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகளைத் தடுக்கவும் வாக்கு எண்ணிக்கைக்காக உலகளவில் டோட்டலைசர் முறை பயன்படுத்தப்படுகிறது.
கடந்த 2018-ல் தேர்தல் ஆணையமே டோட்டலைசர்களை அறிமுகப்படுத்தும் காலம் வந்துவிட்டது என நீதிமன்றத்தில் கூறியிருந்தது. மேலும், தேர்தல் நடத்தை விதிகள் பிரிவு 169-ன் கீழ் மத்திய அரசு தேர்தல் ஆணையத்துடன் ஆலோசித்து விதிகளைத் திருத்த முடியும் என்பதால், நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்ற வேண்டிய அவசியமில்லை” எனத் தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தாமா சேஷாத்ரி நாயுடு, “படிவம் 17-சி மூலம் வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் சரிபார்க்கும் நடைமுறை, டோட்டலைசர் பயன்படுத்தினால் சாத்தியப்படாது. ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பதிலும் சிக்கல்கள் ஏற்படும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும், தேர்தல் நடத்தை விதிகளில் சட்டப்பூர்வ திருத்தம் கொண்டு வரும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது” என கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், “டோட்டலைசர் கருவியை முற்றிலுமாக நிராகரிக்காமல், அதில் உள்ள நடைமுறைச் சிக்ககல்களையே தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கைக்கு டோட்டலைசர் கருவிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாகத் தேர்தல் நடத்தை விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இது தொடர்பாக, தேர்தல் ஆணையம் உரிய பரிந்துரையை மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். அதனை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்,