புதுடெல்லி: நெருங்கிய ரத்த உறவுகளுக்கு இடையேயான திருமணங்களால் ஏற்படும் உடல்நல மற்றும் மரபணு பாதிப்புகளைத் தடுக்க உரிய வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி, 40% பார்வைக் குறைபாடு கொண்ட சட்ட மாணவி சாருவி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக் ஷி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், திருமணம் தனிநபர் விருப்பம் என்றாலும், அது போதிய விழிப்புணர்வுடன் எடுக்கப்படும் முடிவாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டனர். மேலும், சமூக சீர்திருத்தச் சட்டம் இயற்றுவது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் அதிகார வரம்புக்குட்பட்டது என்றும் தெரிவித்தனர்.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தென் மாநிலங்களில் ரத்த உறவுத் திருமணங்கள் 28 சதவீதம் வரை அதிகமாக உள்ளதாகவும், கிராமப்புறங்களில் இதன் பின்விளைவுகள் தெரியாமலேயே திருமணம் செய்து கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார். அதற்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நகர்ப்புறங்களிலும் கூட இது காணப்படுவதாக குறிப்பிட்டதோடு, இந்த முக்கியப் பிரச்சினையைக் கையில் எடுத்ததற்காக மனுதாரரான மாற்றுத்திறனாளி சட்ட மாணவி சாருவிக்கு பாராட்டு தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக கிராமப்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளை ஈடுபடுத்தலாம் என்று யோசனை தெரிவித்த நீதிபதிகள், ரத்த உறவுத் திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே அறிவியல் ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்த, தகுந்த சட்டம் இயற்றுவது குறித்துப் பரிசீலிக்கவும் அல்லது பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டங்களைச் சேர்ப்பது உள்ளிட்ட விரிவான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை முன்னெடுப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.