புதுடெல்லி: ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு திருநங்கைகள் விலக்கப்பட்டு, இருநிலை பாலினத்தவர் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதித்த டெல்லி கல்வி இயக்குநரகம் மற்றும் டெல்லி துணைநிலை சேவைகள் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்புகளை எதிர்த்து ஜேன் கவுஷிக் மற்றும் பிரவீன் சிங் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: அரசுப் பணி நியமனங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஏன் ஆண் மற்றும் பெண் பிரிவினருக்கானதாக வருகிறது? பாலின அடிப்படையில் காலிப்பணியிடங்களை அறிவிப்பதற்கான சட்டப்பூர்வ அடிப்படை என்ன?
பொது ஆட்சேர்ப்பில் காலிப் பணியிடங்களை அறிவிக்க பாலினத்தை அடிப்படையாகப் பயன்படுத்துவதற்கான ஆதாரம் என்ன? ஆசிரியர் காலிப்பணியிட அறிவிப்புகளில் மூன்றாம் பாலினத்தவரைச் சேர்க்க முன்மொழிகிறார்களா? அரசுப் பணியில் திருநங்கைகளுக்கு எவ்வாறு இடமளிக்கப்படும்? இந்த கேள்விகளுக்கான பதிலை டெல்லி அரசு விரிவாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.