

சென்னை: சென்னையில் இருந்து கோவா புறப்பட இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், 5 மணி நேரம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மாலை 5.40 மணிக்கு கோவாவுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் 176 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 182 பேர் இருந்தனர். விமானத்தில் உள்ள ஒரு கழிப்பறையை ஆய்வு செய்த போது, அங்கு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், விமானம் நடுவானில் பறந்து செல்லும் போது வெடிக்கும் என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தது.
உடனே, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடனும், பாதுகாப்பு படை அதிகாரிகள், அதிரடிப்படை வீரர்களும் வந்தனர். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் சோதனை செய்யப்பட்டு கீழே இறக்கப்பட்டனர். தொடர்ந்து, விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்களின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டு, கீழே இறக்கப்பட்டது. இந்த சோதனை இரவு 10 மணி வரை நீடித்தது.
ஆனால் விமானத்தில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து, அந்த விமானம் ஐந்தரை மணி நேரம் தாமதமாக, இரவு 11.10 மணிக்கு சென்னையில் இருந்து கோவா புறப்பட்டுச் சென்றது. இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.