புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் அண்மையில் நடத்திய பேரணியின்போது, கர்ப்பிணி பத்திரிகையாளர் ஒருவரைத் தள்ளிவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) எதிர்ப்புத் தெரிவித்தும், இதில் நடைபெற்ற முறைகேடுக்கு பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் அக்டோபர் 12-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்று மனு தாக்கல் செய்தனர்.
இதுதொடர்பாக செய்தி சேகரிப்பதற்காக, ரிச்சா பராஷர் என்ற கர்ப்பிணி பத்திரிகையாளர் சென்றிருந்தார். அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பேரணியின்போது எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் கையைப் பிடித்து இழுத்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவரது பாதுகாவலர்கள் தள்ளியதில் தான் கீழே விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.
இந்த வழக்கு முன்னதாக விசாரணைக்கு வந்தபோது, அக்டோபர் 26-ம் தேதி விசாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வழக்கு விசாரணைக்கு வராததையடுத்து, இதுகுறித்து வழக்கறிஞர் கவுரவ் பாட்டியா செவ்வாய்க்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
குறிப்பாக, முந்தைய உத்தரவின்படி அக்டோபர் 26-ம் தேதி இந்த வழக்கு பட்டியலிடப்படவில்லை என்றும், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர் மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் முறைப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளதா என்பதில் விளக்கம் தேவை எனவும் முறையிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக பதிலளிக்க ராகுல் காந்திக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.