அபிஷேக் பானர்ஜி

 
இந்தியா

திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகிய 20 எம்.பி.க்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகிய 20 எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்கும்படி 20 எம்.பி.க்களுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்தது. இதில், பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸின் 20 எம்.பி.க்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகி, தேசிய குடிமக்கள் கட்சியில் (என்சிபிஐ) இணைந்தனர்.

இது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், “திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுதீப் பந்தோபாத்யாய், காகோலி கோஷ் தஸ்திதார் உள்ளிட்ட 20 எம்பிக்கள் கட்சியிலிருந்து பிரிந்து என்சிபிஐ கட்சியில் சேர்ந்துள்ளனர்.

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி இவர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்,” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்‌ஷி, வி.மோகனா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “இந்த மனு குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி 20 எம்.பி.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. மேலும், தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் எடுத்த நடவடிக்கை குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT