புதுடெல்லி: பொது நிகழ்ச்சிகளிலும், கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையை எதிர்த்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக மும்பையை சேர்ந்த முகமது சயீது நூரி தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘பொது நிகழ்ச்சிகளிலும், கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி மாதம் அனுப்பிய சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். வந்தே மாதரம் தேசிய பாடலை பாடுவது கட்டாயமல்ல என்று அறிவிக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்தப் பொதுநல மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு விசாரித்தது. அப்போது அந்த அமர்வில் இடம்பெற்ற நீதிபதி ஜோய்மால்யா பக்சி கூறுகையி்ல், ‘‘மத்திய அரசின் சுற்றறிக்கை அறிவுறுத்தலாக மட்டுமே உள்ளது. இந்த அறிவுறுத்தலை பின்பற்றாதவர்களுக்கு எவ்வித தண்டனையும் குறிப்பிடவில்லை என்பதால் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை’’ என்று குறிப்பிட்டார்.
மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே வாதிடுகையில், ‘‘வந்தே மாதரம் பாடலை பாடாதவர்களுக்கு எவ்வித தண்டனையும் குறிப்பிடவில்லை என்றாலும் சமூக நிர்பந்தம் உருவாகி, பாடாதவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பாகுபாடு காட்டப்படும். இணங்கிப் போகுமாறு மிரட்டப்படுவார்கள்’’ என்றார்.
அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‘‘மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையில், வந்தே மாதரம் பாடலை பாடலாம் என்று உள்ளது. பாட மறுப்பவர்களுக்கு தண்டனையோ, சிறையோ இல்லை. மனுதாரரின் கல்வி நிலையத்தில் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை’’ என்று தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே வாதிடுகையில், திரையங்குகளில் தேசிய கீதம் ஒலிபரப்புவது கட்டாயமல்ல என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், மத காரணங்களால் தேசிய கீதத்தை பாட மறுத்த பள்ளி மாணவன் பிஜோய் இம்மானுவை பாதுகாத்த உச்சநீதிமன்ற உத்தரவையும் சுட்டிக் காட்டினார். தேசப்பற்றை வற்புறுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையால் பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்டால் மீண்டும் வழக்கு தொடருங்கள். தற்போதைய நிலையில் இந்தப் பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது’’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.