இந்தியா

தூக்கு தண்டனை முறையை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றும் தற்போதைய முறையை ரத்து செய்து, அதற்கு பதிலாக வலி குறைந்த மாற்று முறைகளை கொண்டு வரக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மரண தண்டனையை நிறைவேற்ற தூக்கிலிடுவதற்கு பதிலாக விஷ ஊசி செலுத்துவது, துப்பாக்கியால் சுடுவது, உடலில் மின்சாரம் பாய்ச்சுவது போன்ற வலி குறைந்த முறைகளை பின்பற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதே நேரத்தில், தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றும் முறையை மாற்றுவது குறித்து மத்திய அரசு விரிவான ஆய்வை மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை என்றும், மாற்று முறை அரசியலமைப்பின் நோக்கமான குறைந்தபட்ச வலி, வேதனையுடன் மனித கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில் இருக்குமா என்பதை நிபுணர் குழு மூலம் ஆராயலாம் என்றும் அந்த அமர்வு தெரிவித்தது.

எதிர்காலத்தில் வலுவான மருத்துவ அல்லது அறிவியல் ஆதாரங்கள் கிடைத்தால், மரண தண்டனை நிறைவேற்றும் முறையின் அரசியலமைப்புச் சட்டப்பூர்வத் தன்மையை மீண்டும் ஆய்வு செய்வதற்கு இந்த தீர்ப்பு தடையாக இருக்காது என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT