லாலு பிரசாத் யாதவ் | கோப்புப்படம்
புதுடெல்லி: கடந்த 2004-2009-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சி செய்தபோது ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, நிலத்தை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு ரயில்வே துறையில் பலருக்கு வேலை அளித்ததாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினருக்கு எதிராகச் சிபிஐ கடந்த 2022-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. லாலு பிரசாத் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, ‘‘வழக்கு தொடர அனுமதியில்லாமல் நடத்தப்பட்ட புலன்விசாரணை ஏற்புடைதல்ல. எனவே சிபிஐ வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என்று வாதிட்டார்.
இதற்குச் சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, ‘‘இந்த வழக்குக்கு முன் அனுமதி தேவையில்லை’’ என்று வாதிட்டார்.
வழக்கு தொடர அனுமதி சார்ந்த விவகாரத்தை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் எழுப்ப அனுமதித்த உச்ச நீதிமன்றம், லாலுவின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது.