புதுடெல்லி: டெல்லி, சென்னை, போபால், கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்களில் பேரியம் குறைக்கப்பட்ட நவீன பட்டாசுகளை வெடித்து சோதிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சோதனை முடிவுகளை மூன்று வாரங்களில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரி அர்ஜுன் கோபால் என்பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பட்டாசு ஆலை உரிமம், விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும் ஆலை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உட்பட பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பிரசன்னா.பி.வராலே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தரப்பில் பட்டாசு தயாரிப்பு, விற்பனை மற்றும் வெடிப்பது தொடர்பாக சில தளர்வுகள் அளிப்பதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதேநேரம், பேரியம் குறைந்த பட்டாசுகளுக்கான ஆய்வகச் சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், நேரடி வெடிப்புச் சோதனைக்கு வெடிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பு, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
125 டெசிபலுக்குக் குறைவான ஒலியுள்ள பட்டாசுகளை அனுமதிக்கலாம் என தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரைத்ததையும் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதை ஏற்ற நீதிபதிகள் அமர்வு, டெல்லி, சென்னை, போபால், கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்களிலும் பேரியம் குறைக்கப்பட்ட நவீன பட்டாசுகளை வெடித்து சோதிக்க அனுமதி அளித்து, அறிக்கையை மூன்று வாரங்களில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.