சென்னை: புவிக் கண்காணிப்புக்கான இஓஎஸ்-05 இமேஜிங் செயற்கைக்கோளை, ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் மூலமாக புவிவட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியது.
நாட்டின் தொலையுணர்வு பயன்பாட்டுக்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் உட்பட பல்வேறு செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் புவிக் கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்காக இஓஎஸ்-03 (ஜிஐசாட்) என்ற அதிநவீன ‘ஜியோ இமேஜிங்’ செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்தது. இது ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் 2021, ஆகஸ்ட் 12-ல் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், கிரையோஜெனிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் திட்டம் தோல்வியில் முடிந்தது.
அதன்பின் வடிவமைக்கப்பட்ட அதிநவீன இஓஎஸ்-05 (ஜிஐசாட் 1-ஏ) செயற்கைக்கோளை, ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது. இந்த ராக்கெட் ஏவுதலின் இறுதி கட்டப் பணிகளுக்கான 27.50 மணி நேர கவுன்ட் டவுண் செப்டம்பர் 2-ம் தேதி இரவு 11.25 மணிக்குத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் நேற்று அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட சுமார் 19 நிமிடங்களில் திட்டமிட்ட புவிவட்ட சுற்றுப்பாதையில் இஓஎஸ்-05 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இந்தச் செயற்கைக்கோள் 2,367 கிலோ எடையுடையது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். தற்போது குறைந்தபட்சம் 171 கி.மீ., அதிகபட்சம் 31,026 கி.மீ. கொண்ட சுற்றுப்பாதையில் வலம் வரும் செயற்கைக்கோள், அதிலுள்ள உந்துவிசை மோட்டார்கள் மூலம் படிப்படியாக இறுதி கட்ட சுற்றுப்பாதைக்கு மாற்றப்படும். இஸ்ரோவின் வரலாற்றில் முதல் முறையாக புவிக் கண்காணிப்புப் பணியை அடிப்படையாகக் கொண்ட செயற்கைக்கோள் ஒன்று, தரையில் இருந்து 36,000 கி.மீ. தூரத்தில் உள்ள புவிவட்டப் பாதையில் இருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.
கடந்த பிப்ரவரி நிலவரப்படி இந்தியாவிடம் 21 தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் செயல்பாட்டில் இருந்தன. அவை அனைத்தும் புவித் தாழ் வட்டப்பாதை அல்லது சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
இந்தச் செயற்கைக்கோள் வானிலை, விவசாயம், மேக வெடிப்பு, கடல்சார் கண்காணிப்பு, கனிமவள ஆராய்ச்சி உட்பட பல்வேறு தரவுகளை உடனுக்குடன் வழங்கும். குறிப்பாகப் புவியின் ஒரு பகுதியை நிகழ்நேர தன்மையில் தினமும் 4 அல்லது 5 முறை படம் பிடிக்கும் திறன், நாட்டின் பாதுகாப்பு மேம்பாடு உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இதிலுள்ள 2 விதமான 3டி கேமராக்களால் புவிப்பரப்பை 40 மீட்டர் வரை மிக துல்லியமாகப் படம் எடுக்க முடியும்.
வானிலை நிலவரங்களைத் தொடர்ந்து ஆராய்ந்து புயல் உட்பட பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள உதவும். மேலும், இந்தியாவின் எல்லைப் பகுதிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான முக்கிய தகவல்களை அளிக்கும்.
ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் வெற்றி பெற்றதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளைப் பிரதமர் மோடி பெரிதும் பாராட்டி உள்ளார்.
இஸ்ரோ மேலும் 6 திட்டங்கள்
இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் ஸ்ரீஹரிகோட்டாவில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நாட்டின் புவி கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை உட்பட பல்வேறு பயன்பாடுகளுக்காக 36,000 கி.மீ. புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் முதல் செயற்கைக்கோள் என்பதால் இத்திட்டமானது சிறப்பு வாய்ந்ததாகும். ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட், நாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதல் திறனுடன் செயல்பட்டது. ஜிஎஸ்எல்வியில் ஆரம்ப கால ஏவுதலில் 1,536 கிலோ வரை மட்டுமே செலுத்த முடிந்தது. தற்போது 2,367 கிலோ எடையைச் சுமந்து சென்று வரலாறு படைத்துள்ளது. இந்த நிதியாண்டில் இன்னும் 6 விண்வெளி திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளோம். தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அரசு கட்டமைப்புதான். ஆனால், அவற்றின் பராமரிப்பு தனியார் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. அங்கு இஸ்ரோ மற்றும் தனியார் ஊழியர்கள் இருப்பார்கள். அங்கிருந்து இஸ்ரோ மற்றும் தனியார் செயற்கைக்கோள்கள் செலுத்தப்படும். ககன்யான் விண்கலம் மனிதர்கள் பயணிக்க உகந்தது என்ற சான்றளிப்பை நாம் உறுதி செய்ய வேண்டும். இதுவரை சுமார் 8,000 சோதனைகள் நிறைவடைந்துள்ளன.
அடுத்தகட்டமாக ஆளில்லா விண்கலத்தை ஏவும் திட்டத்தைச் செயல்படுத்த தயாராகி வருகிறோம். அதன் முடிவுகளை ஆய்வு செய்த பின்னரே மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள். இவ்வாறு இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.