பாகவாரா (பஞ்சாப்): பஞ்சாபில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகமான லவ்லி புரொஃபஷனல் யுனிவர்சிட்டி (எல்பியு) விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டதாக வெளியான தகவல் காட்டுத்தீ போல பரவியது.
இதனால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த மாணவர்கள் வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். வகுப்பறை கண்ணாடிகள், பூந்தொட்டிகள் அடித்து நொறுக்கப்பட்டு, சில பொருட்களுக்கு தீ வைக்கப்பட்டது. மாணவர்கள் ஜலந்தர்-பாகவாரா தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கபுர்தலா மூத்த காவல் கண்காணிப்பாளர் கவுரவ் தூரா மற்றும் ஜலந்தர் டிஐஜி நவீன் சிங்லா தலைமையில் காவல்படையினர் உடனடியாக விரைந்து வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இது முற்றிலும் பொய்யான தகவல் என்று எல்பியு நிர்வாகம் மறு்த்துள்ளது. பல்கலைக்கழகத்தின் நற்பெயரைக் குலைக்க சமூக வலைதளங்கள் மூலம் சில சமூக விரோதிகள் திட்டமிட்டு பரப்பிய வதந்தியே இந்த வன்முறைக்குக் காரணம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. தற்போது மாணவர்கள் மற்றும் பல்கலை. நிர்வாகத்திடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.