ராஞ்சி: ஜார்க்கண்டில் அரசுப் பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக கடந்த ஆகஸ்ட் 21 அன்று ஹசாரிபாக்கில் உள்ள கோர்ரா பகுதியில் முதல்வர் ஹேமந்த் சோரனின் உருவப்பொம்மையை போராட்டக்காரர்கள் எரிக்க முயன்றனர். அப்போது, போராட்டக்காரர்கள் மற்றும் காவல் துறையினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், அரசுப் பணியைத் தடுத்தல் மற்றும் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக சதார் வருவாய் வட்ட அலுவலர் அசுதோஷ் குமார் அளித்த புகாரின் பேரில் 18 பேர் மற்றும் 700 அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பைச் சேர்ந்த அனீஷ் ராய், தேர்வு முறைகேட்டை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியினரும், அதன் மாவட்டத் தலைவர் சஞ்சய் சிங்கும் தாக்குதல் நடத்தியதாக அளித்த புகாரின் பேரில், சஞ்சய் சிங் உட்பட 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சதார் வட்டார ஆய்வாளர் மனோஜ் குமார் சிங், போராட்டக்காரர்கள் மீது அளித்த புகாரின் அடிப்படையில், 210 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை பெயர் குறிப்பிடப்பட்ட 28 பேர் மற்றும் 900-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.