புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு தீவிர பிரச்சினையாக இருந்து வருகிறது. தற்போது காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளதால் அங்கு கிராப்-1 கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக காற்றுத் தர மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 244 (மோசமான நிலை) ஆகக் கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், வரும் நாட்களி்லும் ‘மோசமான’ பிரிவிலேயே நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே உடனடியாக கிராப்-1 கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராப்-1 குறித்து டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறும்போது, “மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது. மெட்ரோ வாகன நிறுத்துமிடங்களைத் தவிர டெல்லி முழுவதும் வாகன நிறுத்துமிடக் கட்டணம் இரட்டிப்பாக்கப்படும்.
டெல்லி மாநகராட்சி, அரசு அலுவலகங்களில் சுழற்சி முறையிலான பணி நேரங்களும், வீட்டிலிருந்து பணிபுரியும் ஏற்பாடுகளும் அறிமுகப்படுத்தப்படும். கட்டுமான, இடிப்புப் பணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். திறந்தவெளியில் குப்பைகளை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது'' என்றார்.