புதுடெல்லி: இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்குமான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கமே முழு பொறுப்பு என்று ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிரான மாணவர் அமைப்புகளின் போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அங்கு செயல்பட்டு வருகிறது.
இதனிடையே, வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட டாக்கா 8-வது தொகுதியில் ஷெரீப் உஸ்மான் ஹாடி என்ற மாணவர் தலைவர் கள மிறங்கினார். கடந்த 12-ம் தேதி இவர் டாக்காவில் பிரச்சாரம் தொடங்கினார். பின்னர் சைக்கிள் ரிக் ஷாவில் செல்லும் போது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஹாடியை தலையில் சுட்டுவிட்டு தப்பினர்.
உடனடியாக டாக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹாடி, மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி 4 நாட்களுக்கு முன்பு ஹாடி உயிரிழந்தார். இந்த தகவல் பரவியதும் வங்கதேசத்தில் பெரும் கலவரம், வன்முறை சம்பவங்கள் நடந்தன. மைமென்சிங் நகரில் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ் (27) என்ற இளைஞர், முஸ்லிம் மதத்தை பற்றி அவதுாறாக பேசியதாக கூறி ஒரு கும்பல் அவரை சுற்றி வளைத்து கொடூரமாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
பின்னர் அந்த கும்பல் தீபு சந்திர தாஸின் உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்தது. இந்த சம்பவம் வங்கதேசத்தில் இந்துக்கள் உட்பட சிறுபான்மையினர் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
ஷெரீப் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசு இருப்பதாக வங்கதேசத்தில் செய்தி பரவியது. இதனை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.
தீபு சந்திர தாஸ் கொடூரமாகக் கொல்லப்பட்டதைக் கண்டித்து இந்தியாவிலும் நேபாளத்திலும் போராட்டங்கள் நடந்தன. டிசம்பர் 20 அன்று புது டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தின் முன் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வங்கதேசத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிசெய்ய அழைப்பு விடுத்தனர்.
டெல்லியில் வங்கதேச தூதரகத்தின் முன் போராட்டங்களை நடத்தியவர்கள், வங்கதேச தூதரின் உயிருக்கு அச்சுறுத்தலை விடுத்ததாக அந்நாட்டில் செய்தி பரவியது. இதையும் மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேர்காணல் அளித்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, ‘‘தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு முழு பொறுப்பு முகமது யூனுஸ்தான். அவரது அரசாங்கம் இந்தியாவுக்கு எதிராக வன்மத்துடன் அறிக்கைகளை வெளியிடுகிறது. அதோடு, வங்கதேசத்தில் உள்ள மதச் சிறுபான்மையினரைப் பாதுகாக்கத் தவறுகிறது. தீவிரவாதிகள் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்க யூனுஸ் அரசாங்கம் அனுமதிக்கிறது. இதனால் பதற்றங்கள் அதிகரிக்கும்போது, ஆச்சரியப்படுவதைப் போல காட்டிக் கொள்கிறது.
இந்தியா பல பத்தாண்டுகளாக வங்கதேசத்தின் மிகவும் உறுதியான நண்பராகவும் பங்காளியாகவும் இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மிகவும் ஆழமானவை. எந்த ஒரு தற்காலிக அரசாங்கத்தையும்விட அவை நீடித்து நிற்கும். முறையான ஆட்சி மீண்டும் நிறுவப்பட்ட உடன், பதினைந்து ஆண்டுகளாக நாங்கள் வளர்த்தெடுத்த விவேகமான கூட்டாண்மைக்கு வங்கதேசம் திரும்பும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்தியா உடனான விரோதப் போக்கு, யூனுஸ் ஆட்சியால் தூண்டப்பட்ட தீவிரவாதிகளால் உருவாக்கப்படுகிறது. இவர்கள்தான் இந்திய தூதரகத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தியவர்கள். ஊடக அலுவலகங்களை தாக்கியவர்கள். சிறுபான்மையினரைத் தாக்கியவர்கள். என்னையும் என் குடும்பத்தினரையும் உயிருக்குப் பயந்து தப்பி ஓடச் செய்தவர்கள்.
தனது பணியாளர்கள் குறித்த இந்திய அரசின் கவலைகள் நியாயமானவை என்பதை வருத்தத்துடன் கூற வேண்டி உள்ளது. ஒரு பொறுப்பான அரசாங்கம், தூதரகங்களைப் பாதுகாத்து அவற்றுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுப்பவர்கள் மீது வழக்கு தொடுக்கும். மாறாக, யூனுஸ் அரசாங்கம் குண்டர்களுக்குப் பாதுகாப்பு அளித்து அவர்களை போராளிகள் என்று அழைக்கின்றனர்’’ என குற்றம் சாட்டியுள்ளார்.