இந்திய பைலட் ஸ்மித் மச்சார்

 
இந்தியா

உலகமே புகழும் இந்திய பைலட் ஸ்மித் மச்சார் குடும்பப் பெயரின் பின்னணி

செய்திப்பிரிவு

மிகவும் துணிச்சலுடன் செயல்பட்டு 'ஃபிளை துபாய்' விமானப் பயணிகளைக் காப்பாற்றிய இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை உலகமே புகழ்ந்து வருகிறது. ஒரு புறம் சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வரும் அதே வேளையில் அவரைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கான தேடல்களும் தொடர்கின்றன.

அந்த வகையில் 'மச்சார்' என்கிற அவரின் குடும்பப் பெயர் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன. ‘மச்சார்’ என்ற பெயருக்கு பொதுவான இந்தி அல்லது உருது மொழியில் ‘கொசு’ என்றுதான் பொருள். ஆனால், ஒரு குடும்பப் பெயராக இதற்கு வேறுபட்ட வரலாற்றுப் பின்னணியும் ஆழமான அர்த்தமும் உள்ளதாக கூறப்படுகிறது.

குஜராத்தின் நாகர் பிராமணர்கள் மற்றும் லோஹானா வணிகச் சமூகத்தினரிடையே இது, ஒரு பாரம்பரியமான குடும்பப் பெயராக விளங்குகிறது.

1942-ல் பேராசிரியர் வினோதினி நீலகண்ட் எழுதிய ‘குஜராத்தி அடகோனோ இதிஹாஸ்’ (குஜராத்தி குடும்பப்பெயர்களின் வரலாறு) என்ற புத்தகம் குஜராத்தி குடும்பப் பெயர்களின் வரலாற்றை விரிவாக ஆய்வு செய்கிறது. இதில் இடப்பெயர்கள், தொழில்கள், தனிப்பட்ட குணங்கள் மற்றும் நகைச்சுவையாக வழங்கப்பட்ட பட்டப்பெயர்கள் உள்ளிட்ட பல வழிகளில் குடும்பப் பெயர்கள் உருவானதை ஆசிரியர் பதிவு செய்துள்ளார். எனினும், மச்சார் குடும்பப் பெயரின் தோற்றத்தையும், பெயர் காரணத்தையும் அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை.

தலைமுறை தலைமுறையாக ஒரு சொல் மாறி வருவது, ஒரு குடும்பம் தாங்கள் வாழ்ந்த இடத்தின் பெயரைத் தேர்ந்தெடுத்தது, அல்லது அப்படியே நிலைத்துவிட்டதாகக் கூறப்படும் ஒரு புனைப்பெயர் எனப் பல சாத்தியக்கூறுகளை அவர் முன்வைத்துள்ளார்.

மச்சார் போலவே, யானை என்று பொருள்படும் ஹத்தி, குதிரை என்று பொருள்படும் கோடா, பூச்சியுடன் தொடர்புடைய மங்கட், மற்றும் கிளி என்று பொருள்படும் போபட் போன்ற குடும்பப் பெயர்களை குஜராத்தி சமூகங்கள் கொண்டுள்ளன. எனவே, இன்று ஒரு விலங்கு அல்லது பூச்சியின் பெயரை குறிப்பிடும் நேரடி அர்த்தத்தை வைத்து மட்டும் குஜராத்தி குடும்பப் பெயர்களின் தோற்றத்தைத் தீர்மானிக்க முடியாது என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

SCROLL FOR NEXT