இந்தியா

உ.பி.யில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் சிலைகள் இடிப்பு: எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் நகரில் அமைக்கப்பட்டிருந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் மூவரின் சிலைகள் சாலை அமைக்கும் பணியின்போது இடிக்கப்பட்ட நிலையில், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஷாஜகான்பூரைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபாகுல்லா கான், ரோஷன் சிங் ஆகியோரின் சிலைகள், மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே உள்ள ஒரு சாலையோரத்தில் நிறுவப்பட்டிருந்தன.

அப்பகுதிக்கு வருகை தரும் மக்கள் பிரதிநிதிகள், இச்சிலைகளுக்குத் தொடர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த மூன்று சிலைகளும் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன. சிலைகள் இடிக்கப்படுவதையும், அவற்றின் சிதறல்கள் குப்பை மேட்டில் கொட்டப்படுவதையும் காட்டும் ஒரு காணொளி, சமூக ஊடகங்களில் வெளியானது.

          

இதையடுத்து, உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடையே இச்சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சாலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்துதல் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததார் ஒருவரே, சிலைகள் இடிக்கப்பட்டதற்குக் காரணம் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சிலைகள் இடிக்கப்பட்ட பிறகு, அவை கழிவு அகற்றும் தளத்தில் கொட்டப்பட்டதாகவும், அந்த இடத்தில் நிறுவப்பட்டிருந்த நினைவுப் பலகைகளும் புல்டோசர் கொண்டு அகற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், “தியாகிகளுக்கு அளிக்கும் மரியாதையை விட அழகுபடுத்தும் பணிகளுக்கு ஒருபோதும் முன்னுரிமை அளிக்க முடியாது. எங்கள் கட்சி நிர்வாகி நகராட்சித் தலைவராகப் பதவி வகித்த காலத்தில் நிறுவப்பட்ட சிலைகள் அவை. இதன் காரணமாகவே, அச்சிலைகள் இடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு” எனக் குற்றம் சுமத்தினார்.

உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், ‘‘பாஜக அரசின் மாநகராட்சி நிர்வாகம், பண்டிட் ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்பாகுல்லா கான் மற்றும் ரோஷன் சிங் ஆகிய மாபெரும் புரட்சியாளர்களின் சிலைகள் மீது புல்டோசர்களை ஏற்றியுள்ளது. சிலைகள் இடிப்புச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி நிலைநாட்டப்படாவிட்டால், ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் வீதிகளில் இறங்கி, இந்த சர்வாதிகாரத்தை கடுமையாக எதிர்ப்பார்கள்’’ என எச்சரித்துள்ளார்.

சுதந்திரப்போராட்டக் காலத்தில் லக்னோ அருகே உள்ள ககோரி என்ற பகுதியில், ஆகஸ்ட், 1925-ம் ஆண்டு ஒரு ரயில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த ரயிலில் ஆங்கிலேய அரசு ஏற்றிச்சென்ற ரொக்கத் தொகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த குற்றத்திற்காக, சுதந்திரப் போராட்ட வீரர்களான ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்பாகுல்லா கான் மற்றும் ரோஷன் சிங் ஆகியோரை ஆங்கிலேயர்கள் டிசம்பர் 19, 1927-ல் தூக்கிலிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT