அகமதாபாத்: குஜராத்தின் அம்பர்டி சஃபாரி பூங்காவில் சிங்கத்தை வனத்துறை ஊழியர்கள் பைக்குகளிலும் எஸ்யூவி வாகனத்திலும் விரட்டிச் சென்ற வீடியோ வைரலானது. இதையடுத்து, சிங்கத்தைத் துன்புறுத்தவில்லை என்றும், அதன் கூண்டுப் பகுதிக்கு வழிநடத்தவே முயன்றதாகவும் வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.
தீபாவளி விடுமுறையை யொட்டி அம்பர்டி சஃபாரி பூங்காவுக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். மாலையில் சிங்கங்கள் தங்கள் கூண்டுப் பகுதிக்குத் திரும்ப வேண்டும். ஆனால், ஒரு சிங்கம் கூண்டை நோக்கிச் செல்லாமல் வேறு திசையில் நகரத் தொடங்கியது. அதைத் தடுத்து, மீண்டும் கூண்டுப் பகுதிக்கு வழிநடத்த ஊழியர்கள் தலையிட்டனர். அப்போது எடுக்கப்பட்ட காணொளி இணையத்தில் வைரலானது.
அதில் மூன்று வனத்துறை ஊழியர்கள் பைக்குகளில் சிங்கத்தின் அருகே செல்வதும், அதனைப் பின்தொடர்ந்து ஒரு எஸ்யூவி வாகனம் வருவதும் தெரிகிறது. இச்சம்பவத்திற்கு வன உயிரின ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிங்கத்தை ஏன் இவ்வாறு விரட்ட வேண்டும் என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். சஃபாரி பூங்காவுக்குள் தனியார் வாகனங்கள் எப்படி அனுமதிக்கப்பட்டன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே, ஊழியர்கள் சிங்கத்தைத் துன்புறுத்த முயலவில்லை என்றும், அதன் கூண்டுப் பகுதிக்கு (கிராள்) வழிநடத்தவே முயன்றதாகவும் கிர் கிழக்கு வனத்துறையின் உதவி வனப் பாதுகாவலர் அமித் வானியா தெரிவித்தார். சிங்கம் துன்புறுத்தப்பட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லை. இருப்பினும், சம்பவம் நடந்த சூழ்நிலை, சிங்கத்தை கூண்டை நோக்கி வழிநடத்திய முறை ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.