நகைக்கடை கொள்ளையன் நிஷாந்த் மதுரை தனிப்படையிடம் ஒப்படைப்பு: தருமபுரியில் சுற்றிவளைத்து கைது

நகைக்கடை கொள்ளையன் நிஷாந்த் மதுரை தனிப்படையிடம் ஒப்படைப்பு: தருமபுரியில் சுற்றிவளைத்து கைது
Updated on: 
2 min read

மதுரை/தருமபுரி: மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான யூடியூபர் நிஷாந்தை தருமபுரியில் போலீஸார் கைது செய்தனர். பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு ஆம்னி பேருந்தில் தப்பிச் சென்றபோது போலீஸாரிடம் நள்ளிரவில் சிக்கியுள்ளார்.

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் கடந்த 12-ம் தேதி ரூ.21 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போனது. போலீஸ் விசாரணையில், மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவைச் சேர்ந்த சுரேஷ் மகன் நிஷாந்த் (25), முகமூடி அணிந்து துணிகரமாக இந்த கொள்ளை சம்பவத்தை தனிநபராக அரங்கேற்றியது தெரிய

வந்தது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும், கொள்ளையனை பிடிக்கவும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதற் கட்ட விசாரணையில் நிஷாந்தின் தந்தை சுரேஷ், தோழியான மதுரை திருப்பாலையைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி (24) ஆகியோரை போலீஸார் கைது செய்திருந்தனர். இவர்களிடம் இருந்து 5 கிலோ நகைகளும், மாடக்குளம் மலையடிவாரத்தில் புதைத்து வைத்திருந்த 10 கிலோ நகைகளையும் போலீஸார் பறிமுதல் செய்து இருந்தனர்.

தலைமறைவான நிஷாந்தை திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸார் தேடி வந்தனர். அவரது புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால், முகக்கவசம், தொப்பி அணிந்து அடையாளத்தை மறைத்தபடி அவர் சுற்றித் திரிந்துள்ளார். அவரது செல்போன் பயன்பாடு, இணையவழி பணப் பரிவர்த்தனைகளையும் போலீஸார் கண்காணித்து வந்தனர்.

இதில் நிஷாந்த் ஆம்னி பேருந்தில் திருப்பூர், தருமபுரி, ஓசூர் வழியாக பெங்களூரு சென்றது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்து சேலத்தை நோக்கி நேற்று முன்தினம் இரவு ஆம்னி பேருந்தில் வந்துள்ளார். அப்போது இவரை அடையாளம் கண்ட ஆம்னி பேருந்து ஓட்டுநர், தருமபுரி அதியமான் கோட்டை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, தருமபுரி மாவட்டம் சேசம்பட்டி பைபாஸ் சாலையில் அதிகாலை 2 மணியளவில் அந்தப் பேருந்தை தருமபுரி போலீஸார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது போலீஸாரைக் கண்ட நிஷாந்த், பேருந்தின் ஜன்னல் வழியாகக் குதித்து தப்ப முயன்றார். எனினும், போலீஸார் அவரைச் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸார், உதவி ஆணையர் வேல்முருகன் தலைமையில் தருமபுரிக்குச் சென்றனர். நேற்று மதியம் நிஷாந்தை மதுரை தனிப்படை போலீஸாரிடம் தருமபுரி போலீஸார் ஒப்படைத்தனர். பின்னர் அவரை மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

கொள்ளையடிக்கப்பட்ட எஞ்சிய நகைகள் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளன, கொள்ளையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, மீனாட்சிக்கும் நிஷாந்துக்கும் இடையிலான தொடர்பு என்ன என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நிஷாந்தும், மீனாட்சியும் மதுரை கோரிப்பாளையம் பகுதியிலுள்ள கல்லூரியில் படித்துள்ளனர். தொடக்க காலத்தில் யூடியூப் சேனலில் ஒன்றாக வேலை பார்த்துள்ளனர். அதன்பிறகு மீனாட்சி தனியாக யூடியூப் சேனல் தொடங்கினார். இதற்கு வெளியே சென்று வீடியோ எடுத்துக் கொடுப்பது என எல்லாவகையிலும் மீனாட்சிக்கு நிஷாந்த் உதவியுள்ளார். விசாரணை முடிவில்தான் அனைத்து விவரங்களும் தெரியவரும்' என்றார்.

மீனாட்சியின் அம்மாவும் ‘யூடியூபர்’

நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சியை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது, அவரது தாய் இந்துமதியும் குடும்பத்தினரும், “தைரியமாக இரு. நீதிபதியிடம் நடந்ததை அப்படியே சொல். நாங்கள் இருக்கிறோம்” என்று சத்தமிட்டனர். இதைக் கேட்ட மீனாட்சி, தலையசைத்தபடி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், அவரது தாய் இந்துமதியும் யூடியூபர் என்பது தெரியவந்துள்ளது. இவர் குக்கீஸ், மசாலா பொருட்கள், கேக் உள்ளிட்டவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். மேலும், நேரம் கிடைக்கும்போது கோயில்கள் மற்றும் பொது இடங்களுக்குச் சென்று வீடியோ எடுத்து தனது யூடியூப், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இந்துமதியை இன்ஸ்டாகிராமில்

92 ஆயிரம் பேரும், அவரது யூடியூப் சேனலில் 43 ஆயிரம் பேரும் பின்தொடர்கின்றனர். இதன்மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமான அவர், நகைக்கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களிலும் நடித்து வந்துள்ளார்.

சமீபத்தில் மதுரையில் உள்ள பிரபல நகைக்கடைக்கு விளம்பரத்துக்காகச் சென்ற இந்துமதி, கழுத்து நிறைய நகைகளை அணிந்துகொண்டு கடையின் நகை ரகங்கள் மற்றும் சலுகைகள் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மீனாட்சி வீட்டில் சோதனை

நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட் டுள்ள நிஷாந்தின் தோழியான மீனாட்சியின் வீடு மதுரை திருப்பாலை பார்க் டவுன் பகுதியில் உள்ளது. இங்கு நேற்று பிற்பகலில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். மீனாட்சியின் தாயார் இந்துமதியிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

நகைக்கடை கொள்ளையன் நிஷாந்த் மதுரை தனிப்படையிடம் ஒப்படைப்பு: தருமபுரியில் சுற்றிவளைத்து கைது
“சிறையில் இருந்து உயிருடன் திரும்புவது கடினம்” - இம்ரான் கான் தெரிவிப்பு

X