குருவாயூர்: கேரளாவின் குருவாயூர் தேவசம் வாரியத் தலைவர் ஏ.வி. கோபிநாத் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் இன்று (ஞாயிறு) 437 திருமணங்கள் நடைபெற்றன. கோயில் வரலாற்றில் இவ்வளவு அதிகமான திருமணங்கள் ஒரே நாளில் நடைபெற்றது இதுவே முதல்முறை. திருமணங்கள் நடைபெறும் இந்த மங்களகரமான நிகழ்வுக்கு பொதுமக்கள் மிகுந்த ஆதரவு அளித்தனர்.
திருமணங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தேவசம் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். உடல்நலக் குறைவு ஏற்படுவோருக்கு உதவ மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
திருமண நிகழ்ச்சிகள் அதிகாலை 4.10 மணிக்குத் தொடங்கின. முதல் 2 மணி நேரத்திலேயே சுமார் 137 திருமணங்கள் நடைபெற்றன. திருமணங்களை நடத்துவதற்காக கோயில் வளாகத்தில் 6 மண்டபங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு திருமணக் குழுவுக்கும் தனித்தனி டோக்கன்கள் வழங்கப்பட்டன.
கூட்ட நெரிசலைத் தவிர்க்க மணமகன், மணமகள் ஆகியோருடன் கோயிலுக்குள் வருபவர்களின் எண்ணிக்கை 24 பேர் என கட்டுப்படுத்தப்பட்டது. 6 மண்டபங்களிலும் சேர்த்து ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 60-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இவ்வாறு கோபிநாத் கூறினார்.