

தஞ்சாவூர்: எந்த கைது நடவடிக்கைக்கும் நான் பயந்தவன் அல்ல என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற திருமண விழா ஒன்றில் அவர் பேசியது: எந்த கைது நடவடிக்கைக்கும் நான் பயந்தவன் அல்ல. தவெக ஆட்சி அமைந்து 105 நாட்கள் ஆகிஉள்ள நிலையில், இந்த அரசால் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயிகள்தான்.
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுக்க, பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய அரசிடம் நிதி இல்லை என முதல்வர் கூறும் நிலையில், எம்எல்ஏக்களுக்கு கார் வாங்கிக்கொடுக்க எங்கிருந்து வந்தது நிதி. எனவே, திமுக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் என்றும், விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறும் கூறிவிட்டோம்.
சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியினர் என்னென்ன கூத்தெல்லாம் அடித்து வருகின்றனர் என்பதை மக்கள் பார்த்து வருகின்றனர். சட்டப்பேரவைக்கு வருகிறோமா அல்லது சூப்பர் சிங்கர்நிகழ்ச்சிக்கு வருகிறோமா என்பதுபோல் உள்ளது. சட்டசபையில் முன்பெல்லாம் கேள்விகேட்டால் பதில் கூறுவது வழக்கம். ஆனால், இப்போது கேள்விகேட்டால் பதில் கூறாமல் பாடல் பாடுகின்றனர்.
சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, சட்டம்- ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசினால், எந்தக் கேள்விக்கும் முதல்வர் விஜய் பதில் அளிப்பது கிடையாது. 3 அமைச்சர்கள் எழுந்து கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், பிரச்சினையை திசை திருப்புகின்றனர். அமைச்சர்கள்,
ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் எல்லாம், மக்கள் பிரச்சினையைப் பேச வரவில்லை. அவர்களுக்கு நான்கு ரீல்ஸ்கள் இருந்தால்போதும். சர்க்கார் நடத்துகிறார்களா அல்லது சர்க்கஸ் கம்பெனி நடத்துகிறார்களா என கேட்கும் அளவுக்குத்தான் தவெக அரசின் செயல்பாடுகள் உள்ளன. தமிழகத்தின் வளர்ச்சியை பின்நோக்கி தள்ளும் டம்மி அரசாக தவெக அரசு உள்ளது.
தமிழகத்தில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து முதல்வருக்குக்கவலை கிடையாது. இதை, இப்போதுதான் மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். எனவே, இந்த ஆட்சியாளர்களின் ஆணவத்துக்கும், கோமாளித்தனத்துக்கும் மக்கள் விரைவில் சரியான பாடத்தைப் புகட்டுவர். இவ்வாறு பேசினார்.
ஒருமையில் விமர்சித்த எம்எல்ஏ: இந்த திருமண விழாவில் திருவையாறு தொகுதி திமுக எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் பேசியபோது, “தஞ்சாவூரில் ஆக.3-ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் பேசியதற்காக ஒரு வழக்கு போட்டனர். ‘சட்டப்பேரவைக் கூட்டம் இருக்கிறது, அவரை கைது செய்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்’ எனக் கூறியும் போலீஸார் கைதுசெய்து, செங்கிப்பட்டிக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக உதயநிதி ஸ்டாலின் அந்த கஷ்டத்தை ஏற்றுக்கொண்டார். உதயநிதியை கைது செய்ததில் இருந்து திமுக மிக எழுச்சியாக உள்ளது” எனத் தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சின்போது, முதல்வர் விஜய், அமைச்சர்கள் கீர்த்தனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோரை ஒருமையில் பேசி விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.