புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருட்டு தொடர்பாக 3 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் கடந்த திங்கள்கிழமை விசாரணையைத் தொடங்கினர்.
அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கைகள், நன்கொடைகளில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட சிறப்பு குழுவை (எஸ்ஐடி) முதல்வர் ஆதித்ய நாத் நியமித்துள்ளார். அந்தக் குழுவினர் கடந்த திங்கள்கிழமை விசாரணையை தொடங்கினர். குறிப்பாக, முறைகேடு செய்தவர்கள், ஆதாரங்களை அழித்தவர்கள் பற்றிய விவரங்களை எஸ்ஐடி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்கள், அயோத்தியில் திடீரென சொத்து சேர்த்தவர்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துள்ளனர். அவர்களில் முக்கியமானவராக அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராயின் முன்னாள் ஓட்டுநர் ராம் சங்கர் யாதவ் மீது சந்தேகம் எழுந்துள்ளது. கோயில் நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் ராம் சங்கருக்கு சிறப்பு சலுகைகள் பல கிடைத்துள்ளன.
அவற்றை பயன்படுத்தி வெளியூரில் இருந்து வரும் கோடீஸ்வர பக்தர்களுடன் அவர் நேரடி தொடர்பில் இருந்துள்ளார். தனது நெருங்கிய கூட்டாளிகளுக்கு வேலை பெற்று தந்ததோடு, அவர்களைப் பணம் எண்ணும் குழுவிலும் இடம்பெறச் செய்துள்ளார். அதன்பின், ராம் சங்கரின் நிதி நிலைமை கோடிக்கணக்கான ரூபாயாக உயர்ந்துள்ளது என்று புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து எஸ்ஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ரூ.200 கோடி காணிக்கை பணம் மட்டுமல்லாமல், ராமர் கோயிலுக்கு காணிக்கை அளிக்கப்பட்ட 2 கிலோ எடையுள்ள தங்க கதாயுதம், பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் காணாமல் போய் உள்ளதாகக் கூறப்படுகிறது. ராமர் கோயில் அறக்கட்டளையின் அலுவலகப் பொறுப்பாளர்களில் ஒருவர் மற்றும் வங்கியால் பணியமர்த்தப்பட்ட முகமையின் சில ஊழியர்களே இந்தத் திருட்டைச் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.