இந்தியா

அவசரநிலை முதல் அரசியல் நுழைவு வரை: சுயசரிதை நூலில் சோனியா காந்தி விவரிப்பு

போத்தி ராஜ்.க

“60 ஆண்டுகளுக்கு முன்பு ராஜீவ் சந்தித்த அதே நேர்மையும் கடமையுணர்வும் கொண்ட பெண்மணியாகவே இன்றும் நான் இருக்கிறேன். ஆனால், அன்று மகிழ்ந்து சிரித்த அளவுக்கு இப்போது நான் சிரிப்பதில்லை!” - சோனியா காந்தி என்ற ஆளுமையின் வாழ்நாள் சுமையை புரிந்துகொள்ள இந்த ஒற்றை வரி போதுமானது.

டெல்லியில் உள்ள ‘10 ஜன்பத்’ இல்லம் பல பத்தாண்டுகளாக இந்தியாவின் மிகச் சக்திவாய்ந்த அரசியல் மையமாகத் திகழ்ந்தது. ஆனால், அந்த வீட்டின் கதவுகளுக்குப் பின்னால் வாழ்ந்த ஒரு பெண்ணின் உண்மையான மனப்போராட்டங்களை தேசமும் உலகமும் அறிந்திருக்கவில்லை.

கடந்த 1975-ஆம் ஆண்டு அவசரநிலையின்போது குடும்பத்துக்குள் வெடித்த வாக்குவாதங்கள், ‘ஆபரேஷன் ப்ளூஸ்டார்’ நடவடிக்கைக்குப் பின் சோனியாவின் படுக்கை அறையில் கண்டெடுக்கப்பட்ட கையெறி குண்டுகள், சோனியாவை அரசியலுக்குள் அனுப்பக் கூடாது என ராகுலும் பிரியங்காவும் போட்ட சண்டை என தன் வாழ்வில் நடந்த பல சம்பவங்களை இதுநாள் வரை சோனியா காந்தி வெளிப்படுத்தியதே இல்லை.

வெளிநாட்டு பெண்மணி என்ற விமர்சனங்கள் வீசப்பட்டபோதும், தனது சொந்த மண்ணாகவே இந்தியாவின் துயரங்களைத் தாங்கிக்கொண்ட ஒரு பெண்ணின் இதயப் பயணம்தான் சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love).

இளமைக்கால நினைவுகளின் இனிய புன்னகை, சேலை கட்டப் பழகிய ஆரம்ப நாட்களின் சுவாரஸ்யம், இழப்புகளின் ஆறாத ரணம், அமைதியைத் தேடிப் படித்த பகவத் கீதையின் தத்துவம் என வாழ்வின் அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கிய ஒரு காவியத்தின் ஆழமான மதிப்பீடு இது.

சோனியா காந்தி தனது சுயசரிதை நூலில் பகிர்ந்துள்ள முக்கிய அரசியல் ரகசியங்கள், சுவாரஸ்யமான அனுபவங்களின் சில அம்சங்கள் இதோ...

அவசரநிலை தவறுதான்:

‘இந்திரா காந்தி அடிப்படையிலேயே ஒரு ஜனநாயகவாதி என்பதால், அவசரநிலை அமல்படுத்தப்பட்ட நடைமுறையிலும் அது சென்ற பாதையிலும் அவருக்கு சிறிதும் நிம்மதியே இல்லை. அன்று நிலவிய தீவிர அரசியல் நெருக்கடிகள் காரணமாகவே அவர் அந்த முடிவை எடுத்தார். ஆனால், அவசரநிலையைக் கொண்டுவரும் முடிவை ராஜீவ் காந்தி முற்றிலுமாக எதிர்த்தார்.

மாறாக, சஞ்சய் காந்தி அதற்கு தீவிர அழுத்தம் கொடுத்தார். ராஜீவ் எவ்வளவோ முயன்றும், அன்றைய சூழலில் சஞ்சய்யின் பேச்சைக் கேட்டே இந்திரா காந்தி செயல்பட்டார். என்னைப் பொறுத்தவரை, அவசரநிலையை அமல்படுத்தியது தவறுதான். சஞ்சய் காந்தி ஓர் ‘அவசரக்காரர்’.

அரசியலமைப்பு ரீதியாக எந்தப் பதவியிலும் இல்லாவிட்டாலும் அரசின் முடிவுகளில் சஞ்சய் ஆதிக்கம் செலுத்தினார். அவரின் செயல்பாடுகளை அப்போதே கட்டுப்படுத்தியிருந்தால், நாட்டுக்கும் குடும்பத்துக்கும் ஏற்பட்ட மிகப் பெரிய சேதங்களைத் தடுத்திருக்க முடியும். தேர்தல் நடத்த இந்திராவிடம் ராஜீவ் காந்தி வலியுறுத்தினார். ஆனால், சஞ்சய் காந்தி அப்போதும் அவசரநிலையைத் திரும்பப் பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்’ என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் கையெறி குண்டுகள்:

1984-ஆம் ஆண்டு பஞ்சாப் பொற்கோவிலில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் ப்ளூஸ்டார்’ ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு காந்தி குடும்பம் எதிர்கொண்ட கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சோனியா இப்படி விவரித்து இருக்கிறார்...

‘அப்போது எனது வீட்டின் ஓர் அறையை நான் திறந்தபோது, அங்கு கையெறி குண்டுகள் (Grenades) கண்டெடுக்கப்பட்ட தருணம் என்னையும் குடும்பத்தினரையும் உறைந்துபோக வைத்தது. உண்மையில், பொற்கோவில் சேதமடைந்த புகைப்படங்களைப் பார்த்து பிரதமர் இந்திரா காந்தி கண் கலங்கி அழுததை நான் நேரில் பார்த்தேன்.’

ராஜீவின் அரசியல் வருகையும் இழப்பும்:

1980-இல் சஞ்சய் காந்தி மறைந்தபின், ராஜீவ் காந்தி அரசியலுக்கு வருவதில் சோனியாவுக்குச் சிறிதும் உடன்பாடில்லை. ‘அவர்கள் உன்னைக் கொன்றுவிடுவார்கள், தயவுசெய்து அரசியலுக்குச் செல்ல வேண்டாம்’ என்று பல இரவுகள் ராஜீவ் காந்தியிடம் அழுது வாதிட்டதாக அவர் குறிப்பிடுகிறார். அரசியலின் கொடூரமான முகத்தை அறிந்திருந்ததால் தன் கணவரைப் பலிகொடுக்க அவர் விரும்பவில்லை.

பின்னாளில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டபோது உலகமே இருண்டுவிட்டதாக உணர்ந்த சோனியா, தன் குழந்தைகளான ராகுல் மற்றும் பிரியங்காவைக் காப்பாற்றும் பெரும் பொறுப்புடன் தவித்தார்.

அந்த இக்கட்டான காலகட்டத்தில் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவைச் சந்தித்தபோது, ‘ராஜீவைக் கொன்றவர்கள் மீது உங்களுக்குப் பழிவாங்கும் நோக்கம் இருக்கிறதா?’ என்ற அவரின் கேள்விக்கு ‘இல்லை’ என்று கூறி, அக்கணமே கதறி அழுத நிகழ்வு தனது மனபாரத்தையும் தேக்கி வைத்திருந்த வேதனையையும் குறைத்ததாக நெகிழ்கிறார். ராஜீவ், ‘என்னுள் முழுவதும் இல்லாமையாக இருப்பதற்குப் பதிலாக, எனக்குள் அந்தத் தருணத்தில் பிரசன்னமாகினார்’ என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ராகுலின் பட்டமளிப்பும் பகவத் கீதையும்:

1995-இல் டிரினிட்டி கல்லூரியில் ராகுல் காந்தி எம்.ஃபில். பட்டம் பெற்றார். அப்போது, அங்கு சென்ற சோனியா காந்தி, கேம்பிரிட்ஜ் வீதிகளில் ராஜீவ் காந்தியுடன் கழித்த மகிழ்ச்சியான நாட்களையும், ‘செனட் ஹவுஸ்’ பட்டமளிப்பு விழாவில் ராகுல் பட்டத்தைப் பெற்றபோது கண்ணீரை அடக்க முடியாமல் தான் தவித்த தருணத்தையும் பதிவு செய்துள்ளார்.

காங்கிரஸ் உடைந்த சூழலில், 1997-இல் லால் பகதூர் சாஸ்திரி வித்யாபீட பேராசிரியர் மூலம் பகவத் கீதையை சோனியா கற்றுத் தேர்ந்தார். அரசியலுக்குள் நுழைவது குறித்த தனது முடிவை, ‘பலனை எதிர்பாராமல் உன் தர்மத்தைச் செய்’ என்ற கிருஷ்ணனின் போதனையால் தெளிவுபெற்று, 1998-ல் அரசியல் களத்தில் இறங்கியதாகக் கூறி தனது சுயசரிதையை உணர்வுபூர்வமாக சோனியா நிறைவு செய்கிறார்.

பிரணாப்பின் பிரதமர் ஆசை:

2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தபோது சோனியா காந்தி, பிரதமர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். அப்போதைய மூத்த காங்கிரஸ் தலைவரான பிரணாப் முகர்ஜி, சோனியாவிடம் நேரிலேயே சென்று உச்ச பதவிக்கு தன்னைத் தேர்ந்தெடுக்க வேண்டும், அதை தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார் என்று சோனியா குறிப்பிட்டுள்ளார்.

பிரணாப் முகர்ஜி பிரதமர் பதவியின் மீது விருப்பம் காட்டியதும், அதை வெளிப்படுத்திய விதமும் தனக்கு சிறிய அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்ததாக சோனியா அந்த நூலில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி அளிக்காவிட்டாலும் கூட பிரணாப் முகர்ஜியை அரசாங்கத்தின் மிக முக்கியத் தூணாக வைத்திருப்பது அவசியம் என்பதாலும், நிதி, பாதுகாப்பு துறைகளை வழங்கி அவரை முதன்மைத் தூணாக சோனியா செயல்படுத்தினார்.

மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்து ஏன்?

2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. சோனியா காந்தி பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூத்த தலைவர் மன்மோகன் சிங்கை பிரதமராக அவர் அறிவித்தார்.

தான் பிரதமராக வேண்டுமா என்பதை தனக்குள்ளும், தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமும் தேர்தல் வெற்றிக்குப் பின் சோனியா விவாதித்துக் கொண்டே இருந்துள்ளார். தான் வெளிநாட்டில் பிறந்தவர் என்ற விஷயத்தை, எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ளும் என்றும், அவர் பதவியை ஏற்றுக்கொண்டால், அது பெரும் குழப்பத்தை உருவாக்கி நாட்டுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்று சோனியா கருதினார். அதன்பின் அவர் ஒரு தெளிவான முடிவுக்கு வந்து பிரதமராக மூத்த அரசியல் தலைவரும், அனுபவம் நிறைந்த மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT