சோனம் வாங்சு

 
இந்தியா

டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உண்ணாவிரதம் மேற்​கொண்​டு​ வரும் சோனம் வாங்​சுக்கை மேல் சிகிச்​சைக்​காக தனி​யார் மருத்​து​வ​மனைக்கு மாற்ற உயர் நீதி​மன்​றம் அனு​மதி அளித்​துள்​ளது.

நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு உள்​ளிட்ட போட்​டித் தேர்வு முறைகேடு விவ​காரத்​தில் மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வலி​யுறுத்​தி, காலநிலை ஆர்​வலர் சோனம் வாங்​சுக் டெல்லி ஜந்​தர் மந்​தரில் ஜூன் 28ம் தேதி கால​வரையற்ற உண்​ணா​விரதப் போராட்​டம் தொடங்​கி​னார்.

அவரது உடல்​நிலை மோசமடைந்​தது. இதையடுத்​து, டெல்லி உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி கடந்த 18-ம் தேதி மத்​திய அரசின் சப்​தர்​ஜங் மருத்​து​வ​மனை​யில் வலுக்​கட்​டாய​மாக அனு​ம​திக்​கப்​பட்​டார். ஆனாலும் அவர் உண்​ணா​விரத போராட்​டத்தை தொடர்​கிறார்.

இந்​நிலை​யில், வாங்​சுக்கை தனி​யார் மருத்​து​வ​மனைக்கு மாற்றக்கோரி அவரது மனைவி கீதாஞ்​சலி டெல்லி உயர் நீதிமன்றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். அதில், தனது கணவரின் உடல்​நிலை குறித்து முரண்​பட்ட அறிக்கை வெளி​யிடப்​படு​வ​தாக குற்​றம்​சாட்டி இருந்​தார். இந்த மனுவை தனி நீதிபதி தள்​ளு​படி செய்​தார். இதையடுத்து கீதாஞ்​சலி மேல்​முறை​யீடு செய்​தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி டி.கே.உ​பாத்​யாயா மற்​றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்​கிய அமர்வு விசா​ரித்​தது. விசாரணை​யின்​போது, வாங்​சுக்கை தனி​யார் மருத்​து​வ​மனைக்கு மாற்​று​வ​தில் ஆட்​சேபணை இல்லை என்று மத்​திய அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில், “சோனம் வாங்சுக்கை மேல் சிகிச்​சைக்​காக குரு​கி​ராமில் உள்ள மெதாந்தா மருத்​து​வ​மனைக்கு மாற்ற வேண்​டும். இது அவருடைய அடிப்படை உரிமையை பாது​காக்​கும்.

மேலும், சிகிச்சையின்போது அவரது ஆரோக்​கி​யத்தை உன்​னிப்​பாகக் கண்​காணிக்க தகு​தி​யான மருத்​து​வர்​கள் அடங்​கிய குழுவை அமைக்க வேண்​டும் அவருக்கு சிகிச்சை தொடர்ச்​சி​யாக​வும் தடை​யின்​றி​யும் கிடைப்​பதை உறுதி செய்​யும் வகை​யில், சப்​தர்​ஜங் மருத்​து​வ​மனை​யில் அளிக்​கப்​பட்ட சிகிச்சை தொடர்​பான அனைத்து மருத்​து​வப் பதிவு​கள், சிகிச்சை விவரங்​கள், பரிசோதனை அறிக்​கைகள் மற்​றும் பிற ஆவணங்​களை மெதாந்தா மருத்​து​வ​மனை மருத்​து​வர்​களிடம் ஒப்​படைக்க வேண்டும்” என கூறப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து கீதாஞ்​சலி எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “என் கணவர் சோனம் வாங்​சுக்கை தனி​யார் மருத்​து​வ​மனைக்கு மாற்ற உத்​தர​விட்ட உயர் நீதி​மன்​றத்​துக்கு மனமார்ந்த நன்​றியை தெரி​வித்​துக்​ கொள்​கிறேன்​” என கூறி​யுள்​ளார்​. இந்நிலையில், சோனம் வாங்சுக் குருகிராமில் உள்ள மெதாந்தா மருத்துவமனைக்கு நேற்று மாலை மாற்றப்பட்டார். அங்கு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT