இந்தியா

சோனம் வாங்சுக் உடல்நிலை கவலைக்கிடம்: 17 நாள் உண்ணாவிரதத்தை கைவிட வலுக்கும் கோரிக்கை

வெற்றி மயிலோன்

புது டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 17-வது நாளை எட்டியுள்ளது. உடல்நிலை மோசமடைந்துள்ள சூழலில், அவர் தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

சமீபத்தில் நீட் உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள் கசிந்ததால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. அதற்கு ஆதரவாக டெல்லியில் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

17 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பேச முடியாத அளவுக்கு சோனம் வாங்சுக்கின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அவரின் உடல் எடை 8.5 கிலோ குறைந்துள்ளது எனவும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தெரிவித்தது.

இது குறித்து பேசிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே, "சோனம் வாங்சுக்கிடம் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், ஆனால் அவர் அதைத் தொடர்வதில் உறுதியாக இருக்கிறார். ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்படவுள்ள பேரணிக்கான ஏற்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு சோனம் எங்களிடம் கூறுகிறார். சோனம் வாங்சுக்கும் உண்ணாவிரதம் இருக்கும் மற்றவர்களும் இறந்துவிட வேண்டும் என்று அரசாங்கம் விரும்புவதாக நான் உணர்கிறேன்” என்றார்.

சோனம் வாங்சுக்கை, பல எதிர்க்கட்சித் தலைவர்களும் சந்தித்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

"ஜனநாயகம், மனிதநேயம் மற்றும் சுற்றுச்சூழலின் மீதான ஆழ்ந்த அர்ப்பணிப்பு சோனம் வாங்சுக்குக்கு உள்ளது. எனவே, ஒட்டுமொத்த உலகிற்கும் அவரின் உயிர் விலைமதிப்பற்றதாக உள்ளது" என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

வாங்சுக் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க, வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு ஜந்தர் மந்தருக்குச் செல்லவிருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார். அவர், "சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்து வருவதால், அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. அவர் நாட்டின் சொத்து. எனவே, அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். போராட்டத்தை முன்னெடுக்க வேறு வழிகளும் உள்ளன” என்று கூறினார்.

SCROLL FOR NEXT